Published : 05 Mar 2020 03:16 PM
Last Updated : 05 Mar 2020 03:16 PM
கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 5 பேர்களில் 4 பேருக்கு தானாகவே சரியாகப் போய்விடும் ஆகவே இந்தியர்கள் கரோனா வைரஸ் குறித்து பீதியோ, பதற்றமோ அடையத் தேவையிலை என்று முன்னணி இந்திய ஆய்வாளரும் மருத்துவ விஞ்ஞானியுமான ககன்தீப் காங் என்பவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் இத்தாலியப் பயணிகள் 16 பேர் உட்பட கரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ள நிலையில் ககன் தீப் காங் கூறும்போது பரிந்துரைக்கப்பட்டால் மட்டுமே கரோனா சோதனை தேவைப்படும் என்றார்.
கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி பேராசிரியரான ககன் தீப் காங் கடந்த ஆண்டு காங் ராயல் சொசைட்டி ஆஃப் லண்டனுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் கரோனா பற்றி பிடிஐக்குக் கூறியதாவது:
இப்போதைக்கு கரோனாவுக்கான அனைத்துச் சிகிச்சைகளும் நோயைத் தீர்ப்பதல்ல தடுக்கும் சிகிச்சைதான், 5 பேரில் 4 பேர்களுக்கு தானாகவே சரியாகி விடும், பாராசிட்டமால் போன்ற மருந்துகளே காய்ச்சலுக்குப் போதுமானது.
ஆனால் மூச்சுவிடுதலில் திடீர் சிரமம் ஏற்பட்டாலோ, அதனுடன் காய்ச்சல் இருமல் இருந்தாலோ உடனடியாக மருத்துவரைச் சந்தித்து விடுவது நல்லது.
அனைவரும் பயப்பட வேண்டியதோ, கவலையடைய வேண்டியதோ, பதற்றமடைய வேண்டியதோ இல்லை, தினமும் நம்மை வைரஸ்கள் பாதித்தே வருகின்றன. ஆனால் கை கால்களை நன்றாக கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வதையும், தரையை நன்றாகத் துடைத்து தொற்று எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்த வெண்டும், முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும்.
பஞ்சின் மூலம் மூக்கு மற்றும் தொண்டையிலிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா வைரஸ் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. சோதனை முடிய 12 முதல் 24 மணி நேரங்கள் வரை ஆகும். பிசிஆர் என்று அழைக்கப்படும் பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் முறையில் குறிப்பிட்ட டி.என்.ஏ. நகல்கள் சோதனைக்குட்படுத்தப்படும்.
கோவிட்-19ஐ விட இந்தியாவிலும் உலகிலும் இன்னமும் கூட ஃபுளூ வைரஸ்தான் அதிகமாக உள்ளது.
இதுதான் புரிதலுக்கு முக்கியமாகத் தேவை. இந்த கோவிட் 19 ஃபுளூ காய்ச்சலை விட தீவிர நோய்க்கூறு கொண்டது, ஆனால் சார்ஸை விட குறைந்த விளைவுகளையே கொண்டது.
இப்போதைக்கு ஃப்ளூ போன்றல்லாமல் கோவிட்-19 குழந்தைகளுக்கு தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதல்ல. ஆனால் வயதானவர்களிடத்தில் கோவிட்-19 அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். இருதயக் குழாய், ரத்தக்கொதிபு, சர்க்கரை நோய் உள்ளவர்களை கரோனா பாதித்து வருகிறது.
கரோனா உள்ளிட்ட வைரஸ்களுக்காக பல மருந்துகள் ஆராய்ச்சியில் இருந்து வருகின்றன, வாக்சைன்களும் ஆராயப்பட்டு வருகின்றன, அடுத்த ஆண்டு கரோனாவை தீர்த்துக் கட்ட மருந்துகள் தயாராகி விடும்.
காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் அலுவலகப் பணிகளை வீட்டிலிருந்தே செய்வது நல்லது. இருமல், தும்மல் போடும் நபர்களிடமிருந்து 6-10 அடி தள்ளி நிற்கவும்.
மேலும் நாவல் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு விட்டால் உடனே தொற்று ஏற்பட்டவர் கடுமையான உடல்நலக்குறைவடைந்து விடுவார் என்று அர்த்தமல்ல.
இவ்வாறு கூறுகிறார் ககன் தீப் காங்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT