Published : 05 Mar 2020 01:07 PM
Last Updated : 05 Mar 2020 01:07 PM
கரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகமுள்ள ஈரானில் சிக்கியுள்ள இந்தியப் பயணிகளும் மாணவர்களும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்துள்ளார்.
சீனாவில் உருவாகி உலக நாடுகள் பெரும்பாலானவற்றில் பரவி வரும் கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வந்துள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பினால் மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தாக்கத்தின் நிலைமை குறித்து ஓர் ஆய்வறிக்கையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தயாரித்து வருகிறார். கேரளாவில் ஆரம்ப நிலை கண்ட நோயாளிகள் மற்றும் மீட்கப்பட்ட மூன்று நோயாளிகள் உட்பட இந்தியாவில் இதுவரை மொத்தம் 29 பேரிடம் கரோனா வைரஸ் நோய் அறிகுறி இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் மேலும் கூறியதாவது:
''இத்தாலியிலிருந்து டெல்லிக்கு வந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளாது. அதேபோல், தெலங்கானா வந்த ஒருவருக்கும் கோவிட்-19 நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட ஒருவருடன் தொடர்புகொண்ட ஆறு பேருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்றிக்கொண்டுள்ளது. இதனால் எச்சரிக்கை அடைந்துள்ள அரசு, கரோனா வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தியாவில் கோவிட்-19 நோய் பரவுவதைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்து வருகிறது.
இந்திய அரசு, சீனாவிலிருந்து மொத்தம் 767 பேரை இரு பணிக்குழுக்கள் மூலம் அழைத்துக்கொண்டு வந்தது. அவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வைரஸ் தொற்று எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
டெஹ்ரான் மற்றும் கோமில் சிக்கித் தவிக்கும் இந்தியப் பயணிகள் மற்றும் மாணவர்களை வெளியேற்றுவதற்காக அரசாங்கம் ஈரானுடன் தேவைக்கேற்ப வகையில தொடர்புகொண்டு செயல்பட்டு வருகிறது. ஈரானில் சிக்கிய இந்தியர்கள் பத்திரமாக வெளியேற்றப்படுவார்கள்’’.
இவ்வாறு மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT