Published : 14 Aug 2015 06:27 AM
Last Updated : 14 Aug 2015 06:27 AM
பாதுகாப்பு படையினரின் காணாமல் போன அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி சுதந்திர தின கொண்டாட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிக்கலாம் என உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, டெல்லி செங்கோட்டைக்கு வருபவர் களின் அடையாள அட்டைகளை கவனமாக பரிசோதிக்கும்படி டெல்லி மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில் பிரதமர் நரேந்தர மோடி நாளை தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தின உரையாற்ற உள்ளார். முன் எப்போதும் இல்லாத வகையில் இவ்விழாவில் பங்கேற்க அதிக அளவில் பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்த முயற்சிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பாதுகாப்புப் படையினரின் காணாமல் போன அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி செங்கோட்டையில் தீவிரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து மத்திய பாதுகாப்பு படையினர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:
நாளை செங்கோட்டையில் சுதந்திர தின விழா சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற உள்ளது. இங்கு வருவதற்கு முன்பு பிரதமர் மோடி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். எனவே, ராஜ்காட் மற்றும் செங்கோட்டையின் சுற்றுப்புறப் பகுதிகளில் தீவிர சோதனைகளை செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும்.
கடந்த டிசம்பர் 2006-ம் ஆண்டு முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளின் பணியில் இருந்த பாதுகாப்புப் படையினரிடம் இருந்து 87 அடையாள அட்டைகள் காணாமல் போய் உள்ளன. இந்த அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி, அதிகாரி அல்லது வீரர்கள் சீருடையில் தீவிரவாதிகள் செங்கோட்டையில் நுழைய முயற்சிக்கலாம். எனவே, செங்கோட்டைக்குள் நுழைபவர்களின் அடையாள அட்டைகளை அதிக கவனம் செலுத்தி சோதனை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து `தி இந்து’விடம் மத்திய உளவுத் துறை வட்டாரத்தினர் கூறும்போது, “சமீபத்தில் இந்திய ராணுவத்தினரின் சீருடையில் வந்த தீவிரவாதிகள் பஞ்சாபின் குருதாஸ்பூரில் தாக்குதல் நடத்தினர். இவர்கள் நமது பாதுகாப்புப் படையினரின் காணாமல் போன அடையாள அட்டையை வைத்திருந்ததால் எளிதில் ஊடுருவியதாக சந்தேகிக்கப்படுகிறது. எனவே, தீவிரவாதிகள் அதே பாணியை செங்கோட்டையிலும் பின்பற்ற வாய்ப்பு உள்ளது. எனினும், பாகிஸ்தான் தீவிரவாதிகள் அவ்வப்போது புதிய உத்தியைக் கடைப்பிடிப்பது வழக்கம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT