Published : 03 Mar 2020 06:42 PM
Last Updated : 03 Mar 2020 06:42 PM

கரோனா வைரஸ் அச்சம்: இத்தாலி, ஈரான், ஜப்பான், தென் கொரியா நாட்டவர்களுக்கு விசா ரத்து: மத்திய அரசு புதிய அறிவிப்பு

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவருவதையடுத்து, இத்தாலி, ஈரான், தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மார்ச் 3-ம் தேதிக்கு முன்பு வழங்கப்பட்டிருந்த இ-விசா உள்ளிட்ட அனைத்து விசாக்களும் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

சீனாவை உலுக்கி வரும் கரோனா வைரஸுக்கு அந்த நாட்டில் இதுவரை 3000 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் சிக்கியிருந்த இந்தியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் இரு ஏர் இந்தியா விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். டெல்லியிலும் சண்டிகரிலும் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாம்களில் 14 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இதில் யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே டெல்லி மற்றும் தெலங்கானாச் சேர்ந்த இருவருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதை மத்திய அரசு நேற்று உறுதி செய்தது. டெல்லியைச் சேர்ந்தவர் சமீபத்தில் இத்தாலி சென்று திரும்பியுள்ளார். தெலங்கானாவைச் சேர்ந்தவர் துபாய் சென்று திரும்பியுள்ளார். இரு நோயாளிகளின் உடல் நிலையும் சீராக இருக்கிறது இதையடுத்து, இருவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் தனி அறையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கைகளை இன்று எடுத்துள்ளது. அதன்படி இத்தாலி, ஈரான், தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து வருவோருக்கு விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

  • ஜப்பான், இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மார்ச் 3-ம் தேதிக்கு முன்பாக வழங்கப்பட்டிருந்த அனைத்து வகையான விசாக்கள், இந்தியாவுக்கு வந்து பெற்றுக்கொள்ளும் விசா, இ-விசாக்கள் அனைத்தும் மார்ச் 3-தேதிக்கு முன்பாக பெற்றிருந்தாலோ அல்லது அவர்கள் இந்தியாவுக்கு வராமல் இருந்தாலோ அவர்களின் விசாக்கள் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. அவசரமான சூழலில் இந்தியாவுக்கு வர வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் தங்கள் நாட்டில் இருக்கும் இந்தியத்தூதரகத்தை அணுகி புதிதாக விசா பெறலாம்.
  • சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு வழக்கமான விசாக்கள், இ-விசாக்கள் பிப்ரவரி 5-ம் அல்லது முன்பு வழங்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்பட்டது. இந்த உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். சீனாவைச் சேர்ந்தவர்கள் அவசரமான சூழலில் இந்தியாவுக்குள் வர வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவர்கள் அருகில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு விசா பெறலாம்.
  • பிப்ரவரி முதல்தேதிக்கு பின் வழக்கமான விசா, இ-விசா பெற்ற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், சீனா, இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஜப்பான் நாடுகளுக்குச் சென்றுவிட்டு இந்தியாவுக்கு இன்னும் வராமல் இருந்தால் அவர்கள் விசா உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. இந்தியாவுக்கு அவசரப்பணி, கட்டாய நிமித்தம் காரணமாக வர வேண்டிய சூழல் ஏற்பட்டால் அவர்கள் அருகில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு விசா பெறலாம்
  • உயர் அதிகாரிகள், ஐநா சபை அதிகாரிகள், சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ஓசிஐ அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், விமானத்தில் பணியாற்றுபவர்கள் ஆகியோருக்கு இந்த விதிமுறையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும். ஆனால், அவர்களுக்குக் கட்டாய மருத்துவப்பரிசோதனை இருக்கும்.
  • சர்வதேச விமானங்களில் பயணித்து இந்தியாவுக்குள் வரும் பயணிகள் அனைவரும் தங்கள் சுயவிவரங்களை அதாவது, தொலைப்பேசி எண்கள், இந்தியாவில் தங்குமிடம், முகவரி, ஆகியவற்றைப் படிவத்தில் குறிப்பிட வேண்டும். மேலும் குடியேற்ற அதிகாரிகளிடமும், சுகாதாரத்துறை அதிகாரிகளிடமும் தங்களின் பயணவிவரங்கள் அளிக்க வேண்டும்.
  • சீனா, தென் கொரியா, ஜப்பான், ஈரான், இத்தாலி, ஹாங்காங், மக்காவு, வியட்நாம், இந்தோனேசியா, நேபாளம், தாய்லாந்து, சிங்கப்பூர், தைவான் ஆகிய நாடுகளில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாக வேறுகூட்டுக்குச் சென்றுவிட்டு இருந்து வரும் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவுக்குள் நுழையும் முன் கட்டாயமாக மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும்.
  • சீனா,ஈரான், தென் கொரியா, இத்தாலி, ஆகிய நாடுகள் மற்றும் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருக்கும் நாடுகளுக்கு இந்தியர்கள் மிகவும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே பயணிக்கவும், இல்லாவிட்டால் பயணத்தை தவிர்க்க வேண்டும்

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x