Published : 03 Mar 2020 02:05 PM
Last Updated : 03 Mar 2020 02:05 PM
மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், ஆளும் கட்சி எம்.பி.க்கள் தங்கள் பகுதியில் இருந்து கடந்து எதிர்த்தரப்பு பகுதிக்குச் சென்றால் அவர்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று சபாநாயகர் ஓம் பிர்லா இன்று எச்சரிக்கை விடுத்தார்.
மக்களவையில் நேற்று பாஜக எம்.பி.க்களும், காங்கிரஸ் எம்.பி.க்களும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதையடுத்து, இந்த எச்சரிக்கையை மக்களவைத் தலைவர் இன்று விடுத்துள்ளார்.
டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று அமளியில் ஈடுபட்டதால், மக்களவையில் நேற்று அலுவல்கள் ஏதும் எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை அவை கூடியதும், டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்தன
அப்போது சபாநாயகர் கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரத்தில் டெல்லி கலவரம் குறித்து விவாதம் நடத்த நேரம் ஒதுக்குகிறேன். கேள்வி நேரத்தில் கேளுங்கள் என்று தெரிவித்தார்.
அப்போது நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசுகையில், "டெல்லி கலவரம் தொடர்பாக விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது. கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரத்தில் பேசலாம். ஆனால் உடனடியாக விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் கூறுவது அருவருப்பாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
திமுக எம்.பி. டி.ஆர். பாலு எழுந்து பேசுகையி்ல், "டெல்லி கலவரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கோரிக்கை விடுத்தும் இன்னும் அரசு பதில் அளிக்காமல் இருக்கிறது" என்றார்.
அப்போது அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதில் அளிக்கையில், "கேள்வி நேரத்துக்குப் பின்வரும் நேரத்தில் டெல்லி கலவரம் குறித்து விவாதிக்கலாம். டெல்லியில் அமைதியும், இயல்பு நிலையும் வருவதே அரசின் முக்கிய நோக்கம். நாங்கள் விவாதிக்கத் தயாராக இருக்கிறோம்" என்றார்.
ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் அமைச்சரின் வார்த்தைக்குக் கட்டுப்படவில்லை. உடனடியாக விவாதிக்க வேண்டும் என கோஷமிட்டனர். மேலும், பதாகைகளையும், கறுப்புக் கொடிகளையும் வைத்து அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில், "எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பதாகைகள் எடுத்து அவைக்குள் வருவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதா? யாரும் பதாகைகளை எடுத்துவரக்கூடாது. இதுதான் நீங்கள் நடந்துகொள்ளும் முறையா?
இனிமேல் ஆளும் கட்சி எம்.பி.க்கள், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் என இருதரப்பும் தங்கள் பகுதியில் இருந்து கடந்து எதிர்த்தரப்புக்குச் செல்லக்கூடாது. அவ்வாறு சென்றால் அந்தக்கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்.
அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு அளித்தால்தான் சபையைச் சுமுகமாக நடத்த முடியும். அவையை நண்பகல் வரை ஒத்திவைக்கிறேன்" என அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT