Published : 03 Mar 2020 10:23 AM
Last Updated : 03 Mar 2020 10:23 AM
கரோனா வைரஸுக்கு உலக நாடுகள் அச்சமடைந்து, தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் அசாம் மாநில பாஜக பெண் எம்எல்ஏ பசுவின் சிறுநீர், சாணம் ஆகியவற்றின் மூலம் கரோனா வைரஸை குணப்படுத்த முடியும் என்று கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஹூபே மாநிலத்தில் உள்ள வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் இதுவரை 3 ஆயிரம் பேரின் உயிரைக் காவு வாங்கியுள்ளது, 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது.
இந்நிலையில் அசாம் மாநிலம், ஹஜோ சட்டப்பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் சுமன் ஹரிபிரியா. இவர்தான் பசுவின் சிறுநீர், சாணம் மூலம் கரோனாவை கட்டுப்படுத்தி, குணப்படுத்த முடியும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநில சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நேற்று நடந்தது. அப்போது, வங்கதேசத்துக்குக் கால்நடைகள் கொண்டு செல்வது குறித்த விவாதத்தில் பாஜக எம்எல்ஏ சுமன் ஹரிபிரியா பங்கேற்று பேசுகையில், " பசுவின் சிறுநீர், சாணம் எவ்வளவு நல்லது என்று நமக்குத் தெரியும். பசுவின் சிறுநீர் நாம் வீட்டைச் சுற்றியோ அல்லது ஒரு இடத்திலோ தெளிக்கும் போது அந்த இடம் சுத்தமாகிறது.
அதேபோலத்தான் பசுவின் சாணத்தையும், கோமியத்தையும் பயன்படுத்தி கரோனா வைரஸை குணப்படுத்தப் பயன்படுத்த முடியும். கரோனா வைரஸ் என்பது காற்றில் பரவும் ஒரு நோய், அதைப் பசுவின் சிறுநீரைத் தெளிப்பதன் மூலம் தடுக்க முடியும்.
ரிஷிகள், முனிவர்கள் ஆகியோர் தாங்கள் இருக்கும் இடத்தை பசுவின் சாணத்தை மூலம் சுத்தப்படுத்தினார்கள். இதன் மூலம் அந்த இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவுக்குக் காற்று சுத்தமாகும். இதை அசாம் மாநில அரசும் பின்பற்றலாம்.
முன்காலத்தில் பஞ்சாமிர்தம் பசுவின் சிறுநீர், பால், தேன் ஆகியவை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பஞ்சாமிர்தம் ஏராளமான நோய்களை குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மக்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதற்கும் உதவியது.
பசுவின் கோமியத்துக்கும், சாணத்துக்கும் மருத்துவ குணங்கள் உண்டு. ரிஷிகள், முனிவர்கள், தங்கள் ஆசிரமத்தில் பசுக்களை வளர்த்து ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார்கள். இது எப்படிச் சாத்தியமாகும்
இவ்வாறு ஹரிபிரியா தெரிவித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT