Published : 03 Mar 2020 07:16 AM
Last Updated : 03 Mar 2020 07:16 AM

இந்தியாவில் மேலும் 3 பேருக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு

ஹைதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு, கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனி வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த வார்டின் சுகாதார ஊழியர்கள், பாதுகாப்பு கவச உடை அணிந்து பணியாற்றுகின்றனர்.படம்: பிடிஐ

ஹைதராபாத்

இந்தியாவில் மேலும் 3 பேர் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப் பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வூஹானில் கடந்த ஆண்டு டிசம்பரில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் இந்த காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,060 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் மட்டும் 2,912 பேரும், இதர நாடுகளில் 148 பேரும் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 89,741 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 80,026 பேர் சீனர்கள் ஆவர்.

இந்தியாவில் மேலும் 2 பேர்

சீனாவில் சிக்கித் தவித்த 760-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மத்திய அரசு கடந்த மாதம் பத்திரமாக மீட்டது. 14 நாட்கள் மருத்துவக் கண்காணிப்புக்குப் பிறகு அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனிடையே கடந்த ஜனவரி மாதம் சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவி உட்பட 3 பேருக்கு கோவிட்-19 காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு 3 பேரும் முழுமையாக குணமடைந்து கடந்த பிப்ரவரியில் வீடு திரும்பினர்.

இந்நிலையில் டெல்லி, ஹைதரா பாத்தில் தலா ஒருவருக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்றியிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை:

இத்தாலியில் இருந்து டெல்லி திரும் பிய ஒருவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்துள்ளன. அவர் டெல்லியில் உள்ள ஆர்எம்எல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அவரது ரத்த மாதிரியை பரிசோதனை செய்தபோது அவருக்கு கோவிட்-19 காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதேபோல தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவர் அண்மையில் துபாயில் இருந்து நாடு திரும்பியுள்ளார். அவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததால் ஹைதராபாத் தில் உள்ள காந்தி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கோவிட்-19 காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஈடல ராஜேந்தர், ஹைதராபாத் காந்தி அரசு மருத்துவமனை டாக்டர் களுடன் நேற்று மாலை அவசர ஆலோ சனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பெங்களூருவை சேர்ந்த பொறியாளர் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பணி நிமித்தமாக துபாய் சென்றார். அங்கு சீனர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். சில நாட் களுக்கு முன்பு அங்கிருந்து பெங்க ளூரு திரும்பினார். அதன் பின்னர் நேற்று பேருந்தில் ஹைதராபாத் வந்துள்ளார். அதிக காய்ச்சல் காரணமாக இவர் ஹைதராபாத் காந்தி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றபோது, அவரது ரத்த மாதிரி புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் இவருக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தனி வார்டு அமைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இத்தாலி சுற்றுலா பயணி

இத்தாலியை சேர்ந்த ஒருவர் ராஜஸ்தானில் சுற்றுலா மேற்கொண் டிருந்தார். கடுமையான காய்ச்சல் காரணமாக ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக் கப்பட்டார். அவரது ரத்த மாதிரி புனே வில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவருக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இத்தாலி சுற்றுலா பயணியையும் சேர்த்து இந்தியாவில் 3 பேர் கோவிட்-19 காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

நாடு முழுவதும் 21 விமான நிலை யங்கள், 12 துறைமுகங்கள், 65 சிறிய துறைமுகங்களில் மருத்துவப் பரி சோதனை நடத்தப்படுகிறது. விமான நிலையங்களில் இதுவரை 5 லட்சம் பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப் பட்டுள்ளது. கோவிட்-19 காய்ச்சல் பரவி வரும் சீனா, ஈரான், தென்கொரியா, சிங்கப்பூர், இத்தாலி உள்ளிட்ட நாடு களுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழக மாணவர்கள் தவிப்பு

இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அந்த நாட்டின் லம்பார்டி பகுதியில் சுமார் 85 இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். காய்ச்சல் காரணமாக பல்வேறு நாடுகள் இத்தாலி உடனான விமான சேவையை நிறுத்திவிட்டன. அண்டை நாடுகள், இத்தாலி உடனான ரயில் சேவைகளை ரத்து செய்துள்ளன.

இந்த சூழ்நிலையில் இத்தாலியில் சிக்கித் தவிக்கும் 85 இந்திய மாணவர்களும், தங்களை மீட்கக் கோரி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் 15 மாணவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. தெலங்கானா 25, கர்நாடகா 20, கேரளா 4 மற்றும் டெல்லி, ராஜஸ்தானை சேர்ந்த மாணவர்களும் இத்தாலியில் சிக்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x