Published : 02 Mar 2020 06:52 PM
Last Updated : 02 Mar 2020 06:52 PM
மரண தண்டனைக் கைதிகளை சாகும் வரை தூக்கிலிடுமாறு கோரும் தூக்குத் தண்டனை இந்திய அரசியல் சாசனத்தின் சாராம்சத்துக்கே எதிரானது என்று கேரளாவைச் சேர்ந்த 88 வயது நபர் மேற்கொண்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
88 வயதான பரமேஸ்வரன் நம்பூதிரி என்பவர் மேற்கொண்ட மனுவில், “மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் கழுத்தில் கயிற்றை மாட்டி சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்ற குற்றத் தண்டனை நடைமுறை நம் அரசியல் சாசனச் சட்டத்தின் எழுத்துக்கும் ஆன்மாவுக்கும் எதிரானது. அடிப்படை உரிமைகள், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், உயிரைப் பாதுகாத்தல் மற்றும் தனிமனித சுதந்திரம் ஆகிய விதிகளை மீறுவதாக உள்ளது.
குடிமக்களின் உயிர் சம்பந்தப்பட்டதாகும் இது மேலும் நம் அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சம், அடிப்படை கட்டமைப்பு ஆகியவற்றை தொடும் விஷயமாகும் இது எனவே இந்த ரிட் மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதே. அரசியல் சாசனத்தின் லட்சியங்களையும் குறிக்கோள்களையும் இது மீறுவதாக இருக்கிறது.
குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றும் விதம் இந்தியத் தன்மையினதாக இல்லாமல் காலனிய காலக்கட்ட முறையாக இருக்கிறது. ஏறக்குறைய ஜனநாயக நாடுகள் அனைத்தும் இந்த முறையை நிறுத்தி விட்டன.
தற்கொலையை குற்றமாக அறிவித்திருக்கும் நாட்டில் தூக்குத் தண்டனை மூலம் குடிமக்களின் உயிர்களைப் பறிக்கலாகுமா, தங்கள் சட்டங்களையே அரசு மீறலாகுமா?” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி போப்டே, மற்றும் காவாய், சூரியகாந்த் ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள், “இந்த மனுவை நாங்கள் ஏற்க விரும்பவில்லை” என்று தள்ளுபடி செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT