Published : 02 Mar 2020 10:47 AM
Last Updated : 02 Mar 2020 10:47 AM
டெல்லியில் மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு பகுதிகளிலும் சிலர் வதந்தியை கிளப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது.
வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த கலவரத்தில் 42 பேர் வரை உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்தக் கலவரம் தொடர்பாக டெல்லி போலீஸார் சிறப்பு புலனாய்வுக் குழுக்களை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பல தனிப்படைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, கலவரத்தை தூண்டிவிட்டவர்கள், வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டறிவதற்காக இந்தத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கலவரச் சம்பவம் தொடர்பாக போலீஸார் இதுவரை 903 பேரை கைது செய்துள்ளனர். 254 முதல் தகவல் அறிக்கைகள்(எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் டெல்லியில் மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு பகுதிகளிலும் சிலர் வதந்தியை கிளப்பி வருகின்றனர். குறிப்பாக மேற்கு டெல்லியின் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டதாகவும் போலீஸாருக்கும் மர்ம நபர்கள் சிலர் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
மோதி நகர், பஞ்சாபி பாக், ராஜோரி கார்டன் போன்ற இடங்களில் கலவரம் ஏற்பட்டதாக கூறி தகவல் பரப்பியுள்ளனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட இடங்களில் போலீஸார் உடனடியாக குவிக்கப்பட்டனர். மேலும் வதந்தி பரப்புவோரை கைது செய்ய தொலைபேசி அழைப்புகளையும், வாட்ஸ் ஆப் தகவல்களையும் கண்காணித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT