Last Updated : 01 Mar, 2020 05:48 PM

 

Published : 01 Mar 2020 05:48 PM
Last Updated : 01 Mar 2020 05:48 PM

மே.வங்கத்தில் அடுத்து பாஜக ஆட்சி மலரும்; சிஏஏவால் முஸ்லிம்கள் யாரும் குடியுரிமையை இழக்கமாட்டார்கள்: அமித் ஷா உறுதி

கொல்கத்தாவில் நடந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ

கொல்கத்தா

மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி மலரும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச்சட்டத்தால், மேற்குவங்கத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் யாரும் சிஏஏ-வால் குடியுரிமையை இழக்கமாட்டார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார்

கொல்கத்தாவில் உள்ள ஷாகிதத் மினார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜக முன்னாள் தேசியத் தலைவரும்,மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

2021-ம் ஆண்டு மேற்குவங்கத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும். இந்த மண்ணின் மைந்தர்தான் அடுத்த முதல்வராக வருவார்.

மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சிறுபான்மை மக்களையும், அகதிகளையும் தவறாக வழிநடத்தி வருகிறது. நான் அவர்களுக்குச் சொல்வதெல்லாம், மத்திய அரசு கொண்டுவந்துள்ள சிஏஏ சட்டத்தால், எந்த ஒரு நபரும் குடியுரிமையை இழக்கமாட்டார்கள்.

எதிர்க்கட்சிகள் சேர்ந்து சிறுபான்மை மக்களைப் பதற்றத்தில் வைத்துள்ளன. குடியுரிமை வழங்கத்தான் சிஏஏ சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது யாருடைய குடியுரிமையையும் பறிக்க அல்ல என்று சிறுபான்மை மக்களிடம் நான் உறுதியளிக்கிறேன். அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமை வழங்கும்வரை நாங்கள் நிறுத்த மாட்டோம்.

மக்களவைத் தேர்தலுக்கு முன், பாஜக வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என்று மம்தா பானர்ஜி பேசியிருந்தார். ஆனால் முதல்முறையாக மேற்கு வங்கத்தில் 42 இடங்களில் 18 இடங்களை பாஜக கைப்பற்றியது. இந்த புள்ளிவிவரங்களை மம்தா பானர்ஜியால் பார்க்க முடியும்.அடுத்துவரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக பெரும்பான்மை பெறும். பொது வாழ்க்கைக்கு வந்தபின் ஏராளமான மாற்றங்களை நான் சந்தித்துவிட்டேன்.

பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தொண்டர்கள் : படம் ஏஎன்ஐ

கடந்த 2014-ம் ஆண்டில் பாஜக 87 லட்சம் வாக்குகள் பெற்றது, 2019-ம் ஆண்டில் உங்கள் அன்பையும், ஆதரவையும் எங்களுக்கு அளித்ததால், 2.30 கோடி வாக்குகள் கிடைத்தது. ஆதலால், கூறுகிறேன், எங்கள் வெற்றி நடையைத் தடுக்க முடியாது.

மாநிலத்தில் மம்தா பானர்ஜி குடும்ப ஆட்சிக்கு வித்திடுகிறார். அவரின் உறவினர் அபிஷேக்கை முன்னிலைப்படுத்த விரும்புகிறார். ஆனால், அதுபோல் மே.வங்கத்தில் ஏதும் நடக்காது. எந்த இளவரசும் மே.வங்கத்தின் முதல்வராக அடுத்த முறை வர முடியாது. இந்த மண்ணின் மைந்தர்தான் அடுத்த முதல்வராக வருவார்
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x