Published : 01 Mar 2020 01:17 PM
Last Updated : 01 Mar 2020 01:17 PM
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்கிடையே, விமான நிலையத்திற்கு வெளியே ‘கோ பேக்’ கோஷங்களுக்கிடையே உள்துறை அமித் ஷா இன்று கொல்கத்தா வந்தடைந்தார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தச் சட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து முஸ்லிம் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், பார்ஸிகள், பவுத்தர்கள் ஆகியோருக்கு மட்டும் குடியுரிமை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் எந்தவிதமான ஆவணங்கள் இல்லாமல் இந்த 6 மதத்தைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தாலும் குடியுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், மக்களோடு இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால் இந்தச் சட்டம் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்று பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. சிஏஏ ஆதரவுக் கூட்டங்களும் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன.
டெல்லியில் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது கலவரம் மூண்டதில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்கத்திலும் தொடர்ந்து சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதற்காக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் சிஏஏ எதிர்ப்பு நிலைப்பாட்டில் கைகோர்த்துள்ளன.
இந்நிலையில் மேற்கு வங்கத்திற்கு ஒருநாள் பயணமாக இன்று வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிஏஏ சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கான பாராட்டுக் கூட்டத்தில் கலந்துகொள்ள விருக்கிறார்.
கொல்கத்தாவிற்கு விமானத்தில் வந்திறங்கிய ஷாவை மாநில வங்கியின் தலைவர் திலீப் கோஷ் தலைமையிலான மேற்கு வங்க பாஜக தலைமை வரவேற்றது.
அப்போது, இடது முன்னணி மற்றும் காங்கிரஸின் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள், கருப்பு கொடிகள் மற்றும் சிஏஏ எதிர்ப்பு சுவரொட்டிகளை வைத்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விமான நிலையத்தின் நுழைவாயிலுக்கு அவர்கள் குறுக்கே செல்வதைத் தடுக்க போலீசார் ஒரு தடுப்பை அமைத்திருந்தததால் அவர்கள் அதை மீறிச் செல்லவில்லை.
ஷாஹீத் மினார் மைதானத்தில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் அமித் ஷா கலந்துகொள்ள உள்ளார். பொதுக் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டாவம் கலந்து கொள்வார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT