Published : 01 Mar 2020 11:33 AM
Last Updated : 01 Mar 2020 11:33 AM

தமிழக முதல்வரின் சிபாரிசுக் கடிதத்தைப் புறக்கணித்த திருப்பதி தேவஸ்தானம்: முன்னாள் எம்.எல்.ஏ., குமுறல்

முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தனது அடையாள அட்டையை செய்தியாளர்களிடம் காண்பிக்கிறார்.

திருமலை

திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் தமிழக முதல்வரின் சிபாரிசு கடிதம் மூலம் சுவாமி தரிசன ஏற்பாடுகள் செய்ய முடியாது என திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் புறக்கணித்தனர். அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜன் திருப்பதியில் ஆதங்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக அதிமுக மதுரை மத்திய தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சிபாரிசு கடிதத்தை திருமலைக்கு கொண்டு வந்தார்.

அந்தக் கடிதத்தை திருமலையில் உள்ள கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி அலுவலகத்திற்கு கொண்டு சென்று வழங்கினார். அந்த கடிதத்தைப் பரிசீலித்த அங்கிருந்த அதிகாரிகள், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள் போன்ற முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களுக்கு மட்டுமே சுவாமி தரிசனம் மற்றும் அறைகள் வழங்கப்படும் எனக் கூறி தமிழக முதல்வர் சார்பில் கொடுத்து அனுப்பிய சிபாரிசு கடிதத்தைக் கண்டுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பி விட்டனர்.

இதுகுறித்து சுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் பிரபலமான பழமை வாய்ந்த பல கோயில்கள் உள்ளன. அதில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து முதல்வர்களும் முக்கிய பிரமுகர்களும் வருகின்றனர்.

அவ்வாறு வரக்கூடிய வெளிமாநில பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு தமிழக அரசால் சிறப்பான தரிசனம் செய்து வைக்கப்படுகிறது. ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் சிபாரிசு கடிதத்தை திருமலையில் கொண்டுவந்து வழங்கினால் அதனை எடுத்துக் கூட பார்க்காமல் தரிசன ஏற்பாடுகள் செய்ய முடியாது என்று கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வரக்கூடிய நிலையில், ஒரு தமிழக முதல்வரின் சிபாரிசுக் கடிதத்திற்கு சுவாமி தரிசனம் செய்து வைக்க முடியாது என்று கூறி இருப்பது வருத்தமளிக்கிறது.

இதுகுறித்து ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து இதுபோன்று நடைபெறாதவாறு, இரு மாநிலங்களுக்கிடையே நல்லுறவு நீடிக்கும் வகையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

வெளி மாநில முதல்வர்கள், முக்கிய பிரமுகர்களுக்கும் கவுரம் அளித்திட வேண்டும்" என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன் கோரிக்கை விடுத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x