Published : 29 Feb 2020 03:40 PM
Last Updated : 29 Feb 2020 03:40 PM
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரும், தேர்தல் வியூக வல்லுநரான பிரசாந்த் கிஷோருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்க மாநிலத்தில் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்களுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்கிறது. இதில் பிரசாந்த் கிஷோருக்கு வாய்ப்பளிக்க திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
மக்களவைத் தேர்தலில் மே.வங்கத்தில் பாஜக எதிர்பாராத வளர்ச்சியைப் பெற்று 18 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக கண்டுள்ள முன்னேற்றம் அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலிலும் மிகப்பெரிய போட்டியாக திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு உருவாகும் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
இதையடுத்து, மாநிலத்தில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில், மம்தா பானர்ஜி வகுத்த வியூகங்களில் முதலாவதுதான் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரை ஆலோசகராக நியமித்துத. இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் மே.வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்ற பிரசாந்த் கிஷோர் மம்தாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடிக்கு ஆதரவாகப் பணியாற்றி அமோக வெற்றி பெற வ வைத்த பிரசாந்த் கிஷோர் அதன்பின் பிஹாரில் நிதிஷ், காங்கிரஸ், லாலு பிரசாத் கூட்டணிக்காக பணியாற்றினார் பிரசாந்த் கிஷோர். இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால் லாலு மகன் மீதான ஊழல் குற்றச்சாட்டைக் காரணம் காட்டி கூட்டணியை உடைத்து, நிதிஷ் குமார், பாஜகவுடன் கூட்டு சேர்ந்தார்.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் பணியாற்றினாலும், கடைசி நேரத்தில் பிரசாந்த் கிஷோரின் திட்டத்துக்கு ஏற்றார்போல் காங்கிரஸ் கட்சியால் பணியாற்ற முடியாததால் தோல்வி அடைந்தது.
ஆனால், ஆந்திர மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் கட்சிக்கு ஆதரவாக பணியாற்றிய பிரசாந்த் கிஷோர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். சந்திரபாபு நாயுடு ஆட்சியை இழந்து, முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி அரியணை ஏறியுள்ளார். மம்தா பானர்ஜிக்கு அடுத்ததாக தமிழகத்தில் திமுகவுக்கு ஆதரவாகவும் பிரசாந்த் கிஷோர் பணியாற்றிவருதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்த பிரசாந்த் கிஷோர் துணைத்தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தார். ஆனால், காஷ்மீர் 370 பிரிவு ரத்து, சிஏஏ ஆதரவு போன்ற விவகாரங்களில் நிதிஷ்குமாருக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் உரசல் இருந்து வந்தது.
மிகுந்த அதிருப்தியுடன் இருந்த பிரசாந்த் கிஷோர் வெளிப்படையாகவே நிதிஷ் குமாரைக் கொள்கை ரீதியாக விமர்சித்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே விரிசல் அதிகமாக, பிரசாந்த் கிஷோரைக் கட்சியில் இருந்து நீக்கி நிதிஷ் குமார் சமீபத்தில் அறிவித்தார்.
இந்த சூழலில் பிஹாரில் நிதிஷ் குமாருக்குப் போட்டியாக 'பாத் பிஹார் கி' என்ற பெயரில் அதாவது, பேச்சு பிஹாரைப் பற்றியது என்ற கோஷத்தோடு பிரசாந்த் கிஷோர் இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார். அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் பிஹார் மாநிலத்தை நாட்டில் முதல் 10 வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் பட்டியலில் கொண்டுவருவதன் நோக்கம்தான் அந்தப் பிரச்சாரத்தின் கருப்பொருளாகும்.
மேற்கு வங்கத் தேர்தலில் ஒருபக்கம் மம்தா பானர்ஜிக்காக களப்பணியாற்றியபோதிலும், பிஹார் மாநிலத்திலும் மெல்லத் தனது அரசியல் நடவடிக்கையை பிரசாந்த் கிஷோர் முன்வைத்து வருகிறார்.
இந்த சூழலில் மேற்கு வங்க மாநிலத்தில் மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு மார்ச் 26-ம் தேதி தேர்தல் நடக்கிறது. திரிணமூல் காங்கிரஸிலிருந்து மணிஷ் குப்தா, ஜோகன் சவுத்ரி, அகமது ஹசன் இம்ரான்,.கேடி சிங் ஆகியோரின் பதவிக்காலம் முடிகிறது.
இந்த தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் புதுமுகங்களுக்கும், நாடாளுமன்றத்தில் சுறுசுறுப்பாக, திறமையாகப் பேசுபவர்களுக்கும் வாய்ப்பளிக்க மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT