Published : 28 Feb 2020 06:12 PM
Last Updated : 28 Feb 2020 06:12 PM
புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டவரும், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத சதிச் செயலில் ஈடுபட்டவருமான யூசுப் சோபனுக்கு எதிராக போதுமான ஆதாரங்களை என்ஐஏ திரட்ட முடியாததால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
யூசுப் சோபனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைக் கடுமையாகக் கண்டித்துள்ள காங்கிரஸ் கட்சி, இதற்குக் காரணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, என்ஐஏ தலைவர் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
ஆனால், என்ஐஏ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ''யுசுப் சோபன் புல்வாமா தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் தொடர்புடையவர் அல்ல. டெல்லி-என்சிஆர் பகுதியில் பல்வேறு இடங்களில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தச் சதித்திட்டம் தீட்டிய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்'' எனத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய விசாரணை முகமை (என்ஐஏ) நேற்று வெளியிட்ட அறிக்கையில், " டெல்லி-என்சிஆர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளுடன் தொடர்புடையவரான யூசுப் சோபன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக ஆதாரங்களைத் திரட்ட முடியாததால், அவருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், என்ஐஏ அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் என்ஐஏ அதிகாரியின் கையொப்பமும் இல்லை, என்ஐஏ முத்திரை இல்லை, என்ஐஏ அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட வாட்டர் மார்க் முத்திரையிடப்பட்ட காகிதத்தில் இந்த அறிவிப்பு இல்லை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.
ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட யூசுப் சோபனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை காங்கிரஸ் கட்சி கடுமையாகக் கண்டித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் கைது செய்யப்பட்டாரா அல்லது வேறு எந்த வழக்கில் யூசுப் சோபன் கைது செய்யப்பட்டார்? எந்த வழக்கில் அவருக்குத் தொடர்பு இருக்கிறது என்பதை மத்திய அரசு தெளிவாகத் தெரியப்படுத்த வேண்டும்.
ஒருவேளை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பவராக இருந்தால், அவருக்கு எதிராக ஆதாரங்களைத் திரட்ட முடியவில்லை என்று விளக்கம் அளிக்க வேண்டும். மெத்தனமாகச் செயல்பட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, என்ஐஏ தலைவர் ஒய்.சி.மோடி ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும். நாங்கள் முன் வைக்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்.
ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி என யூசுப் சோபன் அறிவிக்கப்பட்டாரா? ஆம் என்றால், நாடாளுமன்றத் தாக்குதல், புல்வாமா, உள்ளிட்ட தாக்குதலுக்குக் காரணமானவர்கள் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள்தானே?
யூசுப் சோபனுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லாததால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியவில்லை என்றால் அது எவ்வாறு சாத்தியம்? ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை?
புல்வாமா தாக்குதல், நாடாளுமன்றத் தாக்குதல் போன்றவை தேசத்துரோக குற்றம் என்று நினைக்கிறீர்கள்தானே. மத்திய அரசு ஏதேனும் ஆவணங்கள் தாக்கல் செய்ததா? ஆம் என்றால், அந்த அறிக்கையில் எந்தக் கையொப்பமும் இல்லாதது ஏன்?
யூசுப் சோபனுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளுக்கு நற்சான்று அளித்தவாறு இருக்காதா? தேசத் துரோகத்துக்கு மிக மோசமான உதாரணமாக இது இல்லையா? புல்வாமா தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களைப் பிரதமர் மோடி மறந்துவிட்டாரா?’’ என்று அபிஷேக் மனு சிங்வி கேள்வி எழுப்பினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT