Published : 28 Feb 2020 03:56 PM
Last Updated : 28 Feb 2020 03:56 PM
ராஜதர்மத்தைப் பற்றி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எங்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டாம், எதிர்க்கட்சியின் தூண்டுதலால்தான், டெல்லியில் வன்முறை நிகழ்ந்துள்ளது என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார்.
குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு ஆதரவானவர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையே டெல்லியின் வடகிழக்குப்பகுதியில் திடீரென கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பின்னர் வகுப்புக்கலவரமாகி ஏராளமான பொதுச்சொத்துக்கள், தனியார் சொத்துக்கள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீவைக்கப்பட்டன. இதில் 42 பேர்வரை இதுவரை பலியாகியுள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது கடமையைச் சரியாகச் செய்யாததால்தான் இந்த பெரும் கலவரம் ஏற்பட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. அதுமட்டுமல்லாமல் அமித் ஷா பதவி விலகும்படி வலியுறுத்தியது.
இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சந்தித்துப் பேசி, அமித்ஷா ராஜினாமா செய்யக்கோரி மனு அளித்தனர்.
அப்போது நிருபர்களுக்குப் பேட்டி அளித்த சோனியா காந்தி, " மத்திய அரசு சாதி, மதம், பாகுபாடின்றி அனைத்து மக்களையும் பாதுகாக்கும் ராஜதர்மத்தை காக்க வேண்டும். அனைத்து நம்பிக்கை உள்ளவர்களையும் சமமாக நடத்த வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது சோனியா காந்தி நேற்றுபேசியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்துப் பேசியதாவது:
டெல்லி கலவரம் தொடங்கியதில் இருந்தே அதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அமித் ஷா தீவிரமாகச் செயல்பட்டார். அனைத்து அதிகாரிகளுடன் தீவிரமான ஆலோசனை நடத்தியதால்தான் விரைவாகக் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது.
எங்கள் கட்சியைச் சேர்ந்த கபில் சர்மா, பர்வேஷ் வர்மா ஆகியோர் பேச்சுகள் ஏற்கக்கூடியது அல்ல. அதை பாஜக அங்கீகரிக்காது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மத்திய அரசு ராஜதர்மத்துடன் நடக்க வேண்டும் என்று பேசியுள்ளார். நாங்கள் சொல்கிறோம், தயவு செய்து எங்களுக்குச் சோனியா காந்தி ராஜதர்மத்தைப் பற்றிக் கற்றுக்கொடுக்க வேண்டாம். அவரின் சாதனை முழுவதும் குழப்பங்களும், திருப்பங்களும் நிறைந்தவை என்பது தெரியும்.
காங்கிரஸ் கட்சி ஏதாவது செய்தால், அது நல்லவை. ஆனால், அதே செயலை பாஜக செய்தால், அது மக்களைத் தூண்டிவிடும் செயல் என்கிறார்கள். என்ன விதமான ராஜதர்மம் இது.
சோனியா காந்தி, டெல்லியில் டிசம்பர் மாதம் இறுதிவரை போராடுவோம் என்ற கோஷத்தை முன்னெடுத்தார். இந்த கருத்துக்கள், முழக்கங்கள் எல்லாம் மக்களைத் தூண்டிவிடுபவை இல்லையா
வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி எந்த நிலைக்கும் இறங்கிச் செல்லும், தேசத்தில் அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் காக்கும் வகையில் பொறுப்பாக நடக்க வேண்டும்.
அண்டை நாடுகளில் இருந்து வருவோருக்குக் குடியுரிமை வழங்கும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டைத் தொடர்ந்து மாற்றி வருகிறது.
இவ்வாறு ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT