Published : 28 Feb 2020 02:34 PM
Last Updated : 28 Feb 2020 02:34 PM

என்ஆர்சி, என்பிஆர் இல்லை;  பிஹாரை தொடர்ந்து மகாராஷ்டிராவும் தீர்மானம் நிறைவேற்ற முடிவு?

மும்பை

பிஹாரை தொடர்ந்து என்பிஆர் மற்றும் என்ஆர்சி ஆகியவற்றை நிறைவேற்ற மாட்டோம் என மகாராஷ்டிராவில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

மேற்குவங்கம், ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன. இதேபோல் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. பிஹார் முதல்வர் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதேவேளையில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப் போவதில்லை என்று பிஹார் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

மாநிலத்தில் என்ஆர்சி நடைமுறைப்படுத்தப்படாது, என்பிஆர் 2010-ம் ஆண்டு பின்பற்றப்பட்ட முறையிலேயே நடைமுறைப்படுத்தப்படும். புதிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாது என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டு அது அனைத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இதேபோல் என்ஆர்சி, என்பிஆர் நிறைவேற்றப்படாது என தீர்மானம் நிறைவேற்ற சிவசேனா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பது சிவசேனாவின் நீண்டநாள் கோரிக்கை. அதனால் பாஜகவின் எதிரணியில் உள்ளபோதிலும் குடியுரிமை சட்டத்தை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு உள்ளது.

அதேசமயம் கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கோரிக்கையை சமாதானப்படுத்தும் விதமாக என்பிஆர் மற்றும் என்ஆர்சி ஆகியவற்றை மகாராஷ்டிராவில் நிறைவேற்ற மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற உத்தவ் தாக்கரே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x