Published : 28 Feb 2020 02:30 PM
Last Updated : 28 Feb 2020 02:30 PM
டெல்லி வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை டெல்லி போலீஸார் 48 முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்துள்ளனர்.
இதில் 41 வழக்குகள் கலவரத்தைத் தூண்டியதாகவும், 4 கொலை வழக்குகளும், 3 கொலை முயற்சி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய மோதல் பெரும் வகுப்புக் கலவரமாக மாறியது.
டெல்லி வடகிழக்கில் உள்ள ஜாப்ராபாத், மஜ்பூர், சாந்த் பாக், குரேஜே காஸ், பாஜன்பூரா ஆகிய பகுதிகளில் பெரும் கலவரம் வெடித்தது. ஏராளமான பொதுச் சொத்துகள் சேதமடைந்தன. தனியார் வாகனங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டுத் தீ வைக்கப்பட்டன.
இந்தக் கலவரத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து டெல்லி, ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக 7 ஆயிரம் துணை ராணுவப்படையினர் டெல்லி வடகிழக்குப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் டெல்லி வடகிழக்குப் பகுதியில் மெல்ல அமைதி திரும்பி மக்கள் இயல்பு நிலையை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.
டெல்லி மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் இன்று காலை முதல் வடகிழக்குப் பகுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எரிந்த கட்டிடங்கள், குப்பைகள், கற்கள், உடைந்த பாட்டில்கள் போன்றவை சாலையெங்கும் சிதறிக் கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
வடகிழக்கில் உள்ள ஜாப்ராபாத், மஜ்பூர், சாந்த் பாக், குரேஜே காஸ், பாஜன்பூரா ஆகிய பகுதிகள் கலவரத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு பெரும்பாலான கடைகள் இன்றும் திறக்கப்படவில்லை. சில கடைகள் மட்டுமே திறந்துள்ளன. சில இடங்களில் மட்டும் ஆட்டோக்களும், இ-ரிக்ஷாகளும் ஓடத் தொடங்கியுள்ளன. மக்களும் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து பணிக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
டெல்லி வடகிழக்கில் பாதுகாப்புப் பணி குறித்து காவல் ஆணையர் என்.ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "மக்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் இருக்கவே அதிகமான முன்னுரிமை. இதுவரை 331 இடங்களில் அமைதிக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மசூதிகளுக்குச் சென்று அமைதிக் கூட்டங்கள் நடத்தி வருகிறோம். மக்கள் வதந்திகளைக் கண்டு ஏமாற வேண்டாம். உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கக் கேட்டுக் கொண்டுள்ளோம். 7 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 22-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 48 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 41 வழக்குகள் கலவரத்தைத் தூண்டியதாகவும், 4 கொலை வழக்குகளும், 3 கொலை முயற்சி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3 சிறப்பு ஆணையர்கள், 6 இணை ஆணையர்கள், ஒருகூடுதல் ஆணையர், 22 டிசிபி, 20 ஏசிபி, 60 ஆய்வாளர்கள், 100 பெண் காவலர்கள், 60 கம்பெனி மத்திய ஆயுதப் படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளார்கள்" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் கலவரத்தில் காயமடைந்தவர்கள் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடலைப் பெறப் பிணவறை முன், அவர்களின் அன்புக்குரியவர்களும், குடும்பத்தினரும் கவலையுடன் காத்திருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT