Last Updated : 28 Feb, 2020 01:38 PM

 

Published : 28 Feb 2020 01:38 PM
Last Updated : 28 Feb 2020 01:38 PM

டெல்லி போலீஸ் விசாரணை அதிகாரியின் வழிகாட்டுதலின் பேரில் பிரேதப் பரிசோதனை: உடல்களை ஒப்படைப்பதில் தாமதம் ஏன்? டெல்லி மருத்துவமனை விளக்கம்

டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் சோகம். | பிடிஐ.

புதுடெல்லி

வடகிழக்கு டெல்லி கலவரத்தில் பலியானோர் உடல்களை அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதில் மருத்துவமனை கடும் தாமதம் செய்வதாக எழுந்த புகார்களை அடுத்து தற்போது ஜிடிபி மருத்துவமனை அதற்கான விளக்கத்தை அளித்துள்ளது.

இதுவரை 10 உடல்கள்தான் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பலரும் இறந்தவர்களின் உடல்களைப்பெற காத்திருக்கின்றனர். பிரேதப் பரிசோதனைகள் டெலி போலீஸின் விசாரணை அதிகாரியின் வழிகாட்டுதல்களின்படி நடப்பதால் உடல்களை ஒப்படைப்பதில் தாமதமாகிறது என்று குரு தேஜ் பகதூர் மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வன்முறையில் தன் மாமனாரை இழந்த ஒருவர் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “செவ்வாய் காலையிலிருந்து என் மாமனார் உடலைப் பெற காத்திருக்கிறேன். எப்போது உடல் ஒப்படைக்கப்படும் என்று ஒருவரும் கூற மாட்டேன் என்கிறார்கள். இப்போதுதான் மாலை கிடைத்து விடும் என்று கூறுகின்றனர்” என்றார்.

உடலுக்காக காத்திருக்கும் இன்னொருபெண் கூறும்போது, “குறைந்தபட்சம் இப்போதாவது அவர்கள் உட்காருவதற்கு டெண்ட், நாற்காலிகளை ஏற்பாடு செய்தார்களே என்று நினைக்கிறோம். குடிநீரும் இப்போதுதான் வருகிறது. இதற்கெல்லாம் கூட இங்கு காத்திருக்க வேண்டியுள்ளது. இதோடு உறவினர் உடலை பெறுவதற்கும் காத்திருக்க வேண்டியிருக்கிறது” என்றார்.

தற்போது விமர்சனங்களுக்குப் பிறகு சுதாரித்த மருத்துவமனை நோயாளிகள் விவரத்தை அறிய உதவி மையம் ஒன்றை மருத்துவமனையில் உருவாக்கியுள்ளது. ஆனால் பெயர்ப்பலகையில் அனுமதிக்கப்பட்டோரின் பெயர் பட்டியல் இல்லை, இதனால் எங்கு சிகிச்சை பெறுகின்றனர் என்ற தகவலைப் பெற முடியாது தவிக்கிறோம் என்கின்றனர் பாதிக்கப்பட்டோரின் சில உறவினர்கள், இன்னும் சிலர் காயமடைந்தோர் சிகிச்சைப் பெற்று வருகிறார்களா அல்லது உடல் மார்ச்சுவரியில் இருக்கிறதா என்று கூட தெரியாமல் வராண்டாவில் காத்திருக்கின்றனர்.

உடல்களுக்காகவும் சிகிச்சை பெற்று வருவோரைக் கவனித்துக் கொள்ள வருபவர்களுக்கும் அருகில் உள்ள வீடுகளில் உள்ள சிலர் உணவு, குடிநீர் வழங்கி உதவி புரிந்து வருகின்றனர்.

டெல்லி கலவரத்தில் பலி எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x