Published : 28 Feb 2020 12:44 PM
Last Updated : 28 Feb 2020 12:44 PM
டெல்லியில் கலவரத்தில் ஈடுபட்டதுடன், உளவுத் துறை அதிகாரி அன்கிட் சர்மா கொலையில் தொடர்பிருப்பதாகவும் புகார் எழுந்துள்ள ஆம் ஆத்மி கவுன்சிலர் முகமது தாஹிர் உசேன் வீடு மற்றும் தொழிற்சாலையில் தடயவியல் நிபுணர்கள் சான்றுகளை திரட்டி வருகின்றனர்.
டெல்லி மாநகராட்சியின் 59-வதுவார்டான நேரு விஹார் கவுன்சிலராக முகமது தாஹிர் உசேன் பதவி வகிக்கிறார். முஸ்தபாபாத் பகுதியில் உள்ள 5 மாடிகள் கொண்ட வீட்டில் இவர் வசிக்கிறார். இவரது வீட்டுக்கு அருகே பாஜக முன்னாள் கவுன்சிலர் மேகக் சிங்கின் குடோன் உள்ளது.
இந்த குடோனில் ஏராளமான கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. கலவரத்தின்போது இந்த கார்கள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியைச் சேர்ந்த சிலரின் வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தாஹிர் உசேன் வீட்டுக்கு எவ்வித சேதமும் இல்லை.
அவரது வீட்டில் இருந்து பெட்ரோல் குண்டுகள், அமிலம், கத்தி,அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரது வீட்டுக்கு அருகில் உள்ள கால்வாயில் உளவுத் துறை அதிகாரி அன்கிட் சர்மாவின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
காலையில் பணிக்குச் சென்று மாலையில் வீடு திரும்பிய அன்கிட் சர்மாவை காணவில்லை. அவரை கவுன்சிலர் முகமது தாஹிர் உசேன் தலைமையிலான கும்பல் கடத்திச் சென்று கொலை செய்துவிட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனை கவுன்சிலர் முகமது தாஹிர் உசேன் மறுத்துள்ளார். ஆனால் கலவரத்தில் ஈடுபட்டதற்கு ஆதாரமாக முகமது தாஹிர் உசேன் கையில் தடியுடன் இருக்கும் புகைப்படத்தை பாஜக வட்டாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளன.
இந்த பின்னணியில் கவுன்சிலர் முகமது தாஹிர் உசேனின் வீட்டுக்கு போலீஸார் நேற்று சீல் வைத்தனர். உளவுத் துறை அதிகாரி கொலை குறித்தும் கவுன்சிலர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் குறித்தும் டெல்லி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து முகமது தாஹிர் உசேன் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் முகமது தாஹிரின் வீடு மற்றும் தொழிற்சாலையில் தடயவியல் அதிகாரிகள் இன்று சோதனை செய்து தடயங்களை சேகரித்தனர். இங்கிருந்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக புகார் எழுந்துள்ளதால் அதுதொடர்பான தடயங்களை அவர்கள் சேகரி்த்தனர்.
அவர்களுடன் காவல்துறை அதிகாரிகளும் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அங்குள்ள ஊழியர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளோர்களிடம் விசாரணை நடத்தி காவல்துறையினர் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT