

டெல்லி சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ள நிலையில் வன்முறைக்குக் காரணம் என்று குற்றம்சாட்டப்படும் பாஜக தலைவர்கள் மீதான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று டெல்லி போலீஸாருக்கு அறிவுறுத்திய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை காங்கிரஸ் கடுமையாகக் கண்டித்துள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “நீதிபதியை பணியிட மாற்றம் செய்த முடிவு ஆச்சரியமானதல்ல, வெட்கங்கெட்டத் தனமாக கும்பல் வன்முறையைத் தூண்டி விட்ட பாஜக, வன்முறைகளுக்கு அழைப்புவிடுத்தவர்களை தண்டனையிலிருந்து காப்பாற்ற முயற்சிக்கும் பாஜகதான் நீதிபதி பணியிட மாற்ற முடிவை இருளின் போர்வையில் எடுத்துள்ளது” என்று கடுமையாகச் சாடினார்.
இரவோடு இரவாக நீதிபதி மாற்றப்பட்டதற்குக் காரணம், “வன்முறையில் பாஜக தலைவர்களின் பங்கை நீதிபதி முக்கியாம்சப்படுத்தி, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி போலீசாருக்கு வலியுறுத்தினார், இது நிச்சயமாக ஸ்ரீ நரேந்திர மோடி மற்றும் ஸ்ரீ அமித்ஷாவுக்கு பெரிய தர்ம சங்கடங்களை ஏற்படுத்தியிருக்கும், அதாவது எங்கு குட்டு உடைந்து விடுமோ என்று பாரபட்சமற்ற விமர்சனத்தை கண்டு அஞ்சி நீதிபதியை மாற்றி விட்டனர்” என்று கே.சி.வேணுகோபால் கடுமையாகச்சாடினார்.
ஆனால் மத்திய அரசு பிப்.12ம் தேதியே உச்ச நீதிமன்ற கொலீஜியம் முரளிதர் பணியிட மாற்ற உத்தரவை பரிந்துரை செய்தது என்று மறுத்து விட்டது.
வேணுகோபால் மேலும் கூறும்போது, “வலுவான, சுதந்திரமான நீதித்துறைதான் நாட்டின் முதுகெலும்பாகும். நாடு தற்போது சர்வாதிகாரத்தை கண்டு வருகிறது, அது தொடர்ந்து தன்னை நிலைப்படுத்திக் கொள்ள செயல்பட்டு வருகிறது, இதனால் ஜனநாயக நிறுவனங்கள் மட்டுமல்ல, நீதித்துறையே வெளிப்படையாக ஒடுக்கப்பட்டு வேரறுக்கப் படுகிறது.
இத்தகைய அலட்சியப் போக்கு கலவரத்தில் தங்களின் குழந்தைகளையும், உறவினர்களையும் இழந்தோருக்கு செய்யப்படும் துரோகம் மட்டுமல்லாது, நம் அரசமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான குடிமக்களையும் புறக்கணிப்பதாகும். உண்மையிலிருந்து பாஜக தப்பி விட முடியாது. அவர்களது சொல்லும் செயலும்தான் இந்தஅளவுக்கு மனித உயிர்களைப் பலிவாங்கியுள்ளது” என்றார் கே.சி.வேணுகோபால்