Published : 28 Feb 2020 09:00 AM
Last Updated : 28 Feb 2020 09:00 AM
டெல்லி கலவரம் தொடர்பாக வாட்ஸ் அப் குழுக்கள் மற்றும் வெளிமாநிலத்தவர்களின் தொடர்புகுறித்து விசாரணை தொடங்கியுள்ளது.
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. வடகிழக்கு டெல்லியில் நடந்த இந்த கலவரத்தில் 34 பேர் பலியாகியுள்ளனர். இதில், டெல்லியின் தலைமை காவலர் மற்றும் உளவுப்பிரிவு காவலரும் அடங்குவர். இக்கலவரம் ஏற்படுவதற்கு வாட்ஸ் அப்பில் வெளியான பல்வேறு வகை வதந்திகளும் முக்கியக் காரணம் எனத்தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில், டெல்லிக்கு வெளியே உள்ள மாநிலங்களைச் சேர்ந்த வாட்ஸ்அப் குழுக்கள் இருப்பதாக கருதப்படுகிறது.
இதேபோல், வடகிழக்கு பகுதியை ஒட்டியுள்ள உத்தரபிரதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களும் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரால், டெல்லியின் எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. தற்போது அவர்களை கண்டறிவதற்காக டெல்லி போலீஸாரால் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதில், சாந்த்பாக் பகுதியில் பிணமாக மீட்கப்பட்ட டெல்லி உளவுத்துறை காவலர் அங்கித் சர்மா மற்றும் தலைமை காவலர் ரத்தன்லால் கொல்லப்பட்ட வழக்கிலும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கலவரம் பற்றிய தகவல் அளிக்க டெல்லி போலீஸார் சார்பில் 112 எனும் சிறப்பு தொலைபேசி எண்அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலவரத்தின்போது டெல்லிவாசிகளின் வாட்ஸ்அப்பில் பல புகைப்படங்களும், வீடியோ பதிவுகளும் பரவி பதற்றத்தை ஏற்படுத்தின. இவற்றில் பல பதிவுகள் உ.பி. உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பதிவான பழைய வீடியோக்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டெல்லி போலீஸாரின் சமூக வலைதள விசாரணை பிரிவு, அவற்றை அனுப்பியவர்கள் பட்டியலை சேகரித்து வருகிறது. அவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT