Published : 28 Feb 2020 08:59 AM
Last Updated : 28 Feb 2020 08:59 AM

பிரதமர் மோடி பாராட்டிய 105 வயதான மூதாட்டிக்கு விரைவில் ஆதார் கார்டு

திருவனந்தபுரம்

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த 105 வயதான மூதாட்டி பாகீரதி அம்மாள். சிறு வயதில் குடும்ப சூழல் காரணமாக 3-வது வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்தினார்.

எனினும், படிப்பு மீது கொண்ட ஆர்வம் காரணமாக வயது முதிர்ந்த நிலையிலும் சுற்றுச் சூழல், கணிதம், மலையாளம் ஆகிய பாடங்களில் மாநில எழுத்தறிவு இயக்கம் நடத்திய தேர்வை எழுதி சுமார் 70 சதவீத மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெற்றார். இவரைப் பற்றி பிரதமர் நரேந்திர மோடி தனது சமீபத்திய ‘மன் கி பாத்’ உரையில் குறிப்பிட்டு பாராட்டினார்.

இதனிடையே, ஆதார் கார்டு இல்லாததால் அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற முடியவில்லை என்று பாகீரதி அம்மாள் சமீபத்தில் கவலை தெரிவித்திருந்தார். இந்த செய்தி ஊடகங்களில் வெளியானது. இதையறிந்த, அதிகாரிகள் சமீபத்தில் பாகீரதி அம்மாளின் வீட்டுக்குச் சென்று அவருக்கு ஆதார் கார்டு வழங்க தேவையான நடைமுறைகளை மேற்கொண்டனர்.

‘‘ஏற்கெனவே ஆதார் கார்டு பெற பாகீரதி அம்மாள் முயற்சித்ததாகவும் ஆனால், அவரது வயது முதிர்வு காரணமாக கைரேகைப் பதிவு எடுக்க முடியாததால் தொழில்நுட்பக் காரணங்களால் ஆதார் கார்டு வழங்கப்படவில்லை. இப்போது அதற்கான நடைமுறைகள் முடிந்த நிலையில், ஒரு சில நாட்களில் அவருக்கு ஆதார் கார்டு வழங்கப்படும்’’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x