Published : 27 Feb 2020 07:41 PM
Last Updated : 27 Feb 2020 07:41 PM

டெல்லி போலீஸின் ‘அக்கறையின்மை’- அமித் ஷா-வுக்கு  ஷிரோமணி அகாலிதள் எம்.பி. நரேஷ் குஜ்ரால் வேதனைக் கடிதம்

வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறைகளின் போது உதவுமாறு அழைக்கும் சாதாரண மக்களின் வேண்டுதல்களையும் புறக்கணித்து வாளாவிருந்த டெல்லி போலீசார் ஒரு குறிப்பிட்ட வன்முறைச் சூழலில் 16 முஸ்லிம்களைக் காப்பாற்றுவதற்காக தான் மேற்கொண்ட அழைப்பையும் டெல்லி போலீசார் புறக்கணித்தது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சிரோமணி அகாலிதள் எம்.பி. நரேஷ்குஜ்ரால் வேதனையுடன் கடிதம் எழுதியுள்ளார்.

பிப்ரவரி 26ம் தேதி அன்று டெல்லி போலீஸார் கலவரம் ஏற்பட்ட மஜ்பூர் பகுதியிலிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததையும் உடனே டெல்லி போலீசாருக்குத் தான் அந்த வேண்டுகோளை தெரிவித்ததாகவும் ஆனால் எந்த ஒரு நடவடிக்கையையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை என்று அவர் வேதனையுடன் தன் கடிதத்தில் கூறியுள்ளார், அதாவது ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் ஒரு எம்.பி.யின் வேண்டுகோளுக்கு இதுதான் பதிலா என்று அவர் வேதனையுடன் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுள்ளார்.

இந்தக் கடிதத்தின் நகலை அவர் டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜல், டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் நரேஷ் குஜ்ரால் கூறியிருப்பதாவது:

பிப்ரவரி 26ம் தேதி நள்ளிரவு 11.30 மணியிருக்கும். மஜ்பூர் கோண்டா சவுக் அருகே தானும் 15 முஸ்லிம்களும் ஒரு வீட்டில் சிக்கிக் கொண்டதாகவும் வீட்டை முற்றுகையிட்டு உடைத்து உள்ளே நுழைய ஒரு கும்பல் வாசலில் முயன்று வருவதாகவும் காப்பாற்றுமாறும் எனக்கு ஒருவர் அழைப்பு விடுத்தார்.

நான் உடனே 100 எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளித்ததோடு எனக்கு தொலைபேசியில் அழைத்தவரின் எண்ணையும் போலீஸ் அதிகாரியிடம் அளித்தேன். சூழ்நிலையின் அவசரத்தை நான் ஆபரேட்டரிடம் விளக்கி நான் ஒரு எம்.பி. என்பதையும் குறிப்பிட்டேன். 11.43 மணியளவில் என்னுடைய புகார் பெறப்பட்டதாகவும் உறுதி செய்தனர். ஆனால் எனக்கு கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது என்னவெனில் போலீஸார் இந்தப் புகார் குறித்து எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதே. அந்த வீட்டில் சிக்கிய 16 பேருக்கும் எந்த ஒரு உதவியும் போலீஸ் தரப்பில் அளிக்கப்படவில்லை. அந்த 16 பேரும் அருகில் வசிக்கும் இந்து நண்பர்கள் உதவியுடன் அதிர்ஷ்டவசமாக தப்பிச் சென்றனர். ஒரு எம்.பி. அளித்த புகாருக்கே இந்த நிலை. எனவே டெல்லியின் சிலபகுதிகள் எரிந்ததில் ஆச்சரியமொன்றுமில்லை, ஏனெனில் போலீசார் எந்த ஒரு அக்கறையுமில்லாமல் வாளாவிருந்தனர்., என்று நரேஷ் குஜ்ரால் வேதனையுடன் தன் கடிதத்தில் கூறியுள்ளார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ஐ.கே.குஜ்ராலின் மகனான நரேஷ் குஜ்ரால் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு இது தொடர்பாகத் தெரிவிக்கும் போது, “என் கடிதத்தை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடலாம் என்று நினைத்தேன். 1984-ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் சாட்சியாக நான் இருக்கிறேன். எனவே அது போன்று ஒன்று மீண்டும் நிகழக்கூடாது என்பதே என் விருப்பம். இந்த வன்முறைக்கும், போலீசாரின் அக்கறையின்மைக்கும் எதிராக ஒவ்வொருவரும் குரல் கொடுக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x