Published : 27 Feb 2020 05:30 PM
Last Updated : 27 Feb 2020 05:30 PM
சிஏஏ குறித்து அதிபர் ட்ரம்ப் தனது இந்தியப் பயணத்தின் போது ‘அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்’ என்று கூறியதற்கு அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் தலைவர் பெர்னி சாண்டர்ஸ் ‘இது தலைமையின் தோல்வி’ என்று ட்ரம்ப்பை விமர்சித்ததற்கு பாஜக தலைவர் ட்விட்டரில் கோபாவேசமாகப் பதில் அளித்து விட்டு பிறகு அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார்.
பெர்னி சாண்டர்ஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், சிஏஏ குறித்து பதிவிட்ட போது, “200 மில்லியன்களுக்கும் அதிகமான முஸ்லிம்கள் இந்தியா தங்களது தாய்நாடு என்று கூறுகின்றனர். பரந்துபட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் குறைந்தது 27 பேர் பலியாகியுள்ளனர், அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஆனால் நம் அதிபர் ட்ரம்ப் ‘இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்’ என்று கூறுகிறார். இது மனித உரிமைகளின் தோல்வி” என்று பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து கோபாவேசமடைந்த பாஜக தலைமைச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் பிற்பாடு நீக்கப்பட்ட தன் ட்வீட்டில், “நாங்கள் எவ்வளவு நடுநிலை வகித்தாலும் நீங்கள் எங்களை அமெரிக்கத் தேர்தலில் பங்காற்ற வற்புறுத்துகிறீர்கள், இவ்வாறு கூறுவதற்கு மன்னிக்கவும், ஆனால் நீங்கள் எங்களை வற்புறுத்துகிறீர்கள்” என்று அவர் ட்வீட் செய்து பிறகு சர்ச்சையானவுடன் அதனை நீக்கி விட்டார்.
ஜனநாயகக் கட்சியின் பெர்னி சாண்டர்ஸ் பல முறை இந்தியப் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். அதே வேளையில், ‘காஷ்மீர் குறித்த அமெரிக்காவின் மவுனம்” என்றும் விமர்சித்துள்ளார் பெர்னி சாண்டர்ஸ்.
பெர்னி சாண்டர்ஸின் அயலுறவுக் கொள்கை ஆலோசகரும் இந்திய-அமெரிக்க பிரதிநிதியுமான ரோ கன்னா என்பவர், “காந்தி, நேரு போன்றோரால் வடிவமைக்கப்பட்ட இந்தியாதான் உலகநாடுகளின் மனதை வசீகரித்த ஒன்றாகும். 11ம் நூற்றாண்டு இந்தியா அல்ல. இந்தியாவின் பன்மைத்துவ ஜனநாயகத்தை வேரறுக்கும் எந்த ஒரு முயற்சியும் 11ம் நூற்றாண்டு மத்தியகாலக் கட்டத்துக்கு இந்தியாவை இட்டுச் செல்வதாகும். இது இந்தியாவின் நலனுக்காக இருக்காது” என்று விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT