Published : 27 Feb 2020 01:54 PM
Last Updated : 27 Feb 2020 01:54 PM
மும்பையை அடுத்த தானேவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒவைசி தலைமையிலான பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. போலீஸார் கேட்டுக் கொண்டதற்கிணங்க பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை மாலை மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் பிவாண்டியில் சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆருக்கு எதிரான பொதுக்கூட்டப் பேரணியில் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி உரையாற்றத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி காவல்துறையின் வேண்டுகோளைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் துணை ஆணையர் (மண்டலம் 2) ராஜ்குமார் ஷிண்டே கூறியதாவது:
''இன்று மாலை 6 மணி முதல் பிவாண்டியின் தோபி தலாவ் பகுதியில் உள்ள பர்சுராம் தாவேர் ஸ்டேடியத்தில் சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆருக்கு எதிரான மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முஸ்லிம் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஒவைசி கலந்துகொண்டு தலைமை உரை ஆற்றுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், தலைநகர் டெல்லியில் கலவரங்கள் நடந்ததால் பல பேர் உயிரிழந்த நிலையில் அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினோம். அதில் நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில்கொண்டு பொதுக்கூட்டத்தை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டோம்.
காவல்துறையினர் கோரிக்கைக்கு ஒப்புக்கொண்ட அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்- முஸ்லிமீன் கட்சியைச் சேர்ந்த அமைப்பாளர்கள் ஸ்டேடியத்தில் நடைபெற இருந்த ஒவைசி உரையாற்றும் நிகழ்ச்சியை ரத்து செய்தனர்''.
இவ்வாறு காவல் துணை ஆணையர் ராஜ்குமார் ஷிண்டே தெரிவித்தார்.
இதுகுறித்து ஏஐஎம்ஐஎம்மின் கட்சியைச் சேர்ந்த அவுரங்கபாத் எம்.பி. இம்தியாஸ் ஜலீல் தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில், ''பிவாண்டியில் இன்று மாலை ஏஐஎம்ஐஎம் தலைவர் எம்.பி. அசாதுதீன் ஒவைசி தலைமையில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்துக்கு மும்பை காவல்துறையினர் அனுமதி மறுத்ததோடு, பின்னர் ஒரு நிகழ்வை நடத்துமாறு கோரினர். காவல்துறையினரின் வேண்டுகோளை ஏற்று பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. காலித் குடுவின் தலைமையில் மார்ச் 2-வது வாரத்தில் இது நடைபெறும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.
முகமது காலித் முக்தர் ஷேக் (குடு) ஏஐஎம்ஐஎம் கட்சியின் பிவாண்டி நகரப் பிரிவு தலைவராக உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT