Published : 26 Feb 2020 01:08 PM
Last Updated : 26 Feb 2020 01:08 PM
டெல்லியில் மத்திய ஆயுதப்படை போலீஸ் படைப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள சீருடை, ராணுவத்தினருக்கு வழங்கப்படும் சீருடை போன்று இருப்பதால் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும்போது ராணுவம் குறித்த தவறான கண்ணோட்டம் மக்கள் மனதில் ஏற்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு ராணுவம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
டெல்லி வடகிழக்குப் பகுதியில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 3 நாட்களாகக் கலவரம் நடந்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சட்டம்-ஒழுங்கு நிர்வாகத்தில் டெல்லி போலீஸார், மத்திய ஆயுதப்படை போலீஸார் ஈடுபடுகிறார்கள்.
இதில் மத்திய ஆயுதப்படை போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ள சீருடை , ராணுவத்தின் சீருடையைப் போன்றே சிறிய மாற்றங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி கலவரத்தை அடக்கும் பணியில் டெல்லி போலீஸார், மத்திய ஆயுதப்படைப் பிரிவினர் ஈடுபட்டாலும், அதைப் பார்க்கும் மக்கள் ராணுவம் களத்தில் இறங்கிப் பாதுகாப்பில் ஈடுபடுவதாக தவறான தோற்றத்தையும், கருத்தையும் ஏற்படுத்தும். அரசியல் சாராமல் நாட்டு நலனுக்கான பணியில் ஈடுபட்டு வரும் ராணுவத்தினர் இதுபோன்ற உள்நாட்டுப் பாதுகாப்பில் மிகவும் அவசரமான நேரத்தில்தான் களமிறக்கப்படுவார்கள்.
ஆனால், ராணுவ உடையைப் போன்ற மத்திய ஆயுதப் படையினருக்கும் சீருடை இருப்பது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
இதுகுறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு ராணுவம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
''இந்தியாவின் நிலை உயர்ந்துவரும் சூழலில் நம்முடைய தேசத்தில் நடக்கும் சமீபத்திய நிகழ்வுகள் உள்நாட்டு, சர்வதேச ஊடகங்களுக்குத் தீனியாக இருக்கின்றன. டெல்லி போலீஸாரும், மத்திய ஆயுதப்படை போஸீஸாரும் ராணுவத்தினர் அணியும் சீருடை போன்று அணிந்து பாதுகாப்புப் பணியிலும், தேர்தல் பணியிலும் ஈடுபடும்போது ராணுவத்தினர் ஈடுபடுகிறார்கள் எனும் மாயத் தோற்றம் உருவாகும். தேசிய நலனுக்காக, அரசியல் சார்பின்றிப் பாடுபடும் எங்களுக்கு மக்கள் மத்தியில் தவறான தோற்றத்தை ஏற்படுத்தும்.
ஆதலால், மத்திய ஆயுதப்படைப் பிரிவினர் ராணுவத்தினர் உடையைப் போன்று அணியக்கூடாது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம் ஆகியவை வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட வேண்டும். அதேசமயம், தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள பகுதிகள், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்தக் கோரிக்கையை நாங்கள் கேட்கவில்லை.
ராணுவத்தினர் அணியும் சீருடை போன்று அல்லாமல் வண்ணத்திலும், வடிவத்திலும் மத்திய ஆயுதப்படைக்கும், மாநில போலீஸாருக்கும் ஆடைகளை வடிவமைக்காமல் வேறுவடிவத்தில் வடிவமைக்க வேண்டும். துப்பாக்கி குண்டு துளைக்காத ஆடைகள், காக்கி நிறத்திலேயே இருக்க வேண்டும். வெளிச்சந்தையில் ராணுவ உடைகள் விற்கப்படுவதையும் கட்டுப்படுத்த வேண்டும்''.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT