Published : 26 Feb 2020 12:06 PM
Last Updated : 26 Feb 2020 12:06 PM
டெல்லி வடகிழக்கில் நடந்து வரும் கலவரத்தில் காயமடைந்தவர்கள் பாதுகாப்புடன் உரிய அவசர சிகிச்சை பெற போலீஸார் உறுதி செய்ய வேண்டும் என்று டெல்லி போலீஸாருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று நள்ளிரவில் நடந்த விசாரணையில் உத்தரவிட்டது.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது. இந்த சூழலில் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் தொடர்ந்து 3-வது நாளாக கலவரம் நடந்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்ட போலீஸார், மக்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லி கலவரத்தால் காயம் ஏற்பட்டு, சிகிச்சை பெற முடியாமல் இருக்கும் மக்களுக்கு உரிய சிகிச்சை பெறப் பாதுகாப்பு வழங்கவும், உரிய மருத்துவ சிகிச்சை வழங்கிடவும் போலீஸாருக்கும், மருத்துவமனை நிர்வாகத்துக்கும் உத்தரவிட வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் சுரூர் மந்தர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் நேற்று நள்ளிரவு அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை உடனடியாக விசாரிக்கவும் கேட்டுக்கொண்டார்.
அதுமட்டுமல்லாமல் வடகிழக்கு டெல்லியில் உள்ள மருத்துவமனை மிகவும் சிறியதாக இருப்பதால், அங்கு மேல் சிகிச்சை வழங்க முடியாமல் பலர் காயத்துடன் இருக்கிறார்கள். அவர்களை ஆம்புலன்ஸிலும் அழைத்துச் செல்ல முடியவில்லை. பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் செல்ல போலீஸார் உதவி கேட்டும் வரவில்லை. ஆதலால் உரிய பாதுகாப்பு வழங்க போலீஸார் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இதையடுத்து இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.முரளிதர், அனுப் ஜே. பாம்பானி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. அவர்கள் நள்ளிரவில் பிறப்பித்த உத்தரவில், "கலவரத்தில் காயம் அடைந்தவர்கள் உடனடியாக அவசர சிகிச்சை பெற போலீஸார் உரிய பாதுகாப்பை, வழியை ஏற்படுத்த உறுதி செய்ய வேண்டும். அதேபோல மருத்துவமனைக்கு வரும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க குரு தேஜ்பகதூர் மற்றும் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிடுகிறோம்" என உத்தரவிட்டனர்
இன்று பிற்பகல் 2.15 மணிக்கு மீண்டும் இந்த மனு உயர் நீதிமன்றம் விசாரணைக்கு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT