Published : 26 Feb 2020 09:23 AM
Last Updated : 26 Feb 2020 09:23 AM
டெல்லி வடகிழக்குப் பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் கலவரம், வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. குடியுரிமைச் சட்டத்தை (சிஏஏ) ஆதரிப்பவர்களும், எதிர்ப்பாளர்களும் கற்களை வீசித் தாக்கி, வாகனங்களை அடித்து நொறுக்கினர். இந்தக் கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 17-ஆக அதிகரித்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ஏற்கெனவே பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ள நிலையில் மேலும் 4 உடல்கள ஜிடிபி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக வந்ததகா மருத்துவ வட்டாரங்கள் உறுதி செய்தன.
“லோக்நாயக் மருத்துவமனையிலிருந்து 4 உடல்கள் வந்தன.மேலும் விவரங்களை பகிர முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம்” என்று மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
செவ்வாய் இரவு வரை காயமடைந்தவர்களில் 150 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் காயமடைந்த 20 பேர் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக ஜிடிபி மருத்துவமனை மருத்துவர் டாக்டர் சுனில் குமார் தெரிவித்தார்.
ஜிடிபி மருத்துவமனையிலும் மேக்ஸ் மருத்துவமனையிலும் நோயாளிகளை சென்று பார்த்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், “இந்தப் பைத்தியக்காரத்தனம் உடனடியாக முடிய வேண்டும்” என்றார் காட்டமாக.
கலவரத்தில் பலியான ஹெட் கான்ஸ்டபிள் ரத்தன் லாலின் உடல் மூத்த அதிகாரிகளின் முன்னிலையில் புதைக்கப்பட்டது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி நிலைமை குறித்து ஆழமாகக் கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இறந்தவர்களில் 5 பேர் அடையாளம் தெரிந்துள்ளது, அவர்கள், மொகமட் ஃபர்கான், ஷாஹித் கான், நஜீம், வினோத், ராகுல் சோலங்கி ஆகியோர்களாவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT