Published : 26 Feb 2020 09:11 AM
Last Updated : 26 Feb 2020 09:11 AM
திருப்பதியில் நூற்றுக்கணக்கான மன நலம் குன்றியவர்கள், ஆதரவற்றோர், பிச்சைக்காரர்களுக்கு திருப்பதி காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் ரெட்டி மறு வாழ்வு அளித்து வருகிறார்.
திருப்பதி நகர எஸ்பி.யாக 15 நாட்களுக்கு முன் பதவி பொறுப்பேற்றவர் ரமேஷ் ரெட்டி. பல்வேறு வெளி மாநில பக்தர்கள் அதிகமாக வரும் திருப்பதியில், வெளி மாநிலத்தை சேர்ந்த மன நலம் குன்றியவர்களும், ஆதரவற்றோர்களாக சுற்றித் திரிபவர்களும், பிச்சைக்காரர்களும் ஏராளம். இவர்கள் பிளாட்பாரங்களில் படுத்து உறங்கி, யாராவது காசோ, பணமோ கொடுத்தால் வாங்கி உயிர் பிழைத்து வருகின்றனர்.
பல வெளிமாநிலத்தவர், தங்க ளது வீட்டில் யாருக்காவது மன நலம் குன்றி விட்டாலோ, தீராத வியாதிகளால் தவித்து வந்தாலோ அவர்களை மொழி தெரியாத திருப்பதியில் விட்டு, விட்டு செல்வது அன்றாட சம்பவமாகி விட்டது. இதனால் தெருவுக்கு தெரு இதுபோன்ற ஆட்களை நாம் காணலாம். இவர்களை சொந்த பந்தங்கள் ஒருவேளை திருப்பதியில் மீண்டும் தேடலாம் என்றாலும் கூட அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருப்பார்கள். ஆதலால், இதுபோன்றவர்களுக்கு மறு வாழ்வு அளிக்கலாம் எனும் உயர்ந்த எண்ணத்துடன் நேற்று, ஒரு ஆட்டோவில் புறப்பட்டார் திருப்பதி காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் ரெட்டி. இவருடன் ‘தாய் மடி’ எனும் தனியார் அறக்கட்டளையினரும் சென்றனர்.
திருப்பதி அரசு மருத்துவமனை பிளாட்பாரங்களில் ஆதரவற்றோர்களாக சுற்றித் திரிந்த சிலரை பார்த்து, அவர்களுக்கு சால்வை போர்த்தி, அவர்களின் ஊர், பெயர்களை எஸ்பி அன்புடன் விசாரித்தார். பிறகு அவர்களுக்கு உண்ண உணவு பொட்டலங்களை வழங்கினார். அவர்கள் வயிறார சாப்பிட்டதும், அவர்களுடைய ‘ஜடா’ முடியை அகற்றி, சவரம் செய்வித்து, குளிப்பாட்டவும் ஏற்பாடுகள் செய்தார்.
பின்னர் குளித்து முடித்ததும் அவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. அந்த புத்தாடைகள் அணிந்ததும் அவர்கள் அனைவரும் ‘பளிச்’ என புது மனிதர்களாக தெரிந்தனர். இதில் பலர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் விருப்பப்பட்டால், ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்த்து தனது சொந்த செலவில் பார்த்துக் கொள்வதாகவும் உறுதி அளித்தார். இவற்றை பார்த்த பொதுமக்கள், காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் ரெட்டியின் மனிதாபிமானச் செயலை வெகுவாக பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT