Published : 26 Feb 2020 06:45 AM
Last Updated : 26 Feb 2020 06:45 AM
டெல்லி வடகிழக்குப் பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் கலவரம், வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. குடியுரிமைச் சட்டத்தை (சிஏஏ) ஆதரிப்பவர்களும், எதிர்ப்பாளர்களும் கற்களை வீசித் தாக்கி, வாகனங்களை அடித்து நொறுக்கினர். இந்தக் கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது. இந்தக் கலவரத்தையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் உள்ளிட்டோர் அவசர ஆலோசனை நடத்தினர்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி, தீ வைத்தனர். இதனால் பதற்றமான சூழல் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கலவரக்காரர்களை கலைத்தனர். அப்பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இதனிடையே நேற்று காலையும் இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தினரைக் கலைத்தனர். ஆனாலும் கலவரக்காரர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டனர்.
இந்தக் கலவரத்தில் நேற்று வரை மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் நடந்த கலவரத்தில் 5 பேரும், நேற்றைய கலவரத்தின்போது 8 பேரும் உயிரிழந்தனர். இதில் துப்பாக்கிக் குண்டு காயத்தால் இறந்தவர்கள் பலர் எனத் தெரியவந்துள்ளது. கலவரத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்கள் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
கலவர சம்பவங்களில் மேலும் 48 போலீஸார், பொதுமக்களில் 102 பேர் காயமடைந்துள்ளனர். வன்முறை சம்பவத்தைப் படம்பிடித்த பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வடகிழக்கு டெல்லியில் நிலவும் பதற்றம் காரணமாக அனைத்துப் பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை விடப்பட்டது. மேலும், வடகிழக்கு மாவட்டத்தில் வரும் மார்ச் மாதம் 24-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து போலீஸார் உத்தரவிட்டனர்.
அனைத்துத் தரப்பு மக்களும் அமைதியாக இருக்கும்படியும், வதந்திகளையும், பொய்யான செய்திகளையும் நம்ப வேண்டாம் எனவும் போலீஸார் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அமித் ஷா ஆலோசனை
இதற்கிடையே டெல்லி கலவரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார். இந்த கூட்டத்தில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், போலீஸ் ஆணையர் அமுல்யா பட்நாயக், காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா, பாஜக மாநிலத் தலைவர் மனோஜ் திவாரி, ராம்விர் பிதூரி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பின் வெளியே வந்த முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறுகையில், “கலவரம் நடந்த பகுதியில் அதைக் கட்டுப்படுத்த போதுமான அளவு போலீஸார் இல்லை. எந்த விதமான உத்தரவும் இல்லாமல் போலீஸாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பேசினேன். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும். அவசியம் ஏற்பட்டால் வெளியூர் நபர்கள் யாரும் உள்ளே வராத அளவுக்கு சீல் வைக்கப்படும்” என்றார்.
டெல்லியில் கலவரம் நடந்துள்ள பகுதிகளில் தற்போது ஆயுதமேந்திய 1,000 போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் டெல்லியை ஒட்டியுள்ள மாநிலங்களை இணைக்கும் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் போலீஸார் தெரிவித்தனர். மேலும் போலீஸார்-தொகுதி எம்எல்ஏவுடனான ஒத்துழைப்பை அதிகரிக்கவும் மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட பகுதிகளில் அமைதிக் குழுக்களை புதுப்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ளூரைச் சேர்ந்த பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், சிறந்த உள்ளூர் பிரதிநிதிகளை அந்தக் குழுக்களில் இணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கலவரம் நடக்கும் பகுதிகளில் கூடுதல் போலீஸாரை நிறுத்தவும், சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் டெல்லி போலீஸாரின் ஆயுதமேந்திய வீரர்கள் பிரிவும் பாதுகாப்புப் பணியில் களமிறங்கியுள்ளது. இதுதவிர துணை ராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
கலவரம் தீவிரமானது ஏன்?
இதனிடையே போலீஸார் குறைவாக இருந்ததால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் கலவரம் தீவிரமடைந்ததாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர். வன்முறையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை ஜிடிபி மருத்துவமனையில் முதல்வர் கேஜ்ரிவால் பார்த்து ஆறுதல் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT