Published : 25 Feb 2020 04:15 PM
Last Updated : 25 Feb 2020 04:15 PM

டெல்லியில் ஆயுதம் தாங்கிய 1000 போலீஸார் குவிப்பு: டெல்லி-உ.பி. எல்லை கண்காணிக்கப்படுவதாக உயர்மட்டக் குழு கூட்டத்தில்  தகவல்

டெல்லி போலீஸின் ஆயுதம் தாங்கிய ஆயிரம் பேர் கொண்ட படை வன்முறை பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் டெல்லி-உ.பி. மாநில எல்லைகள் நெருக்கமாக கண்காணிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகிழக்கு டெல்லியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கும் சிஏஏ எதிர்ப்பை எதிர்க்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறைகள் தலைவிரித்தாடி வருகின்றன, இதில் 7 பேர் பலியாகியுள்ளனர். இருதரப்பினரும் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம்சுமத்தி வரும்நிலையில் சமூகவலைத்தளங்களில் இருதரப்பினரும் மாறி மாறி வன்முறை வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் போலீஸாரால் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டிய நிலையில் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் கேஜ்ரிவால், டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜல், போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்னாயக் உள்ளிட்டோர் அடங்கிய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மேலும் போலீஸ்-எம்.எல்.ஏ ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தவிர சமூகத்தின் அனைத்து மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், மதிப்பு மிக்க குடிமகன்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழு அமைதி மற்றும் சமாதான குழு அமைத்து வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி-உ.பி.-ஹரியாணா எல்லைப் பகுதிகளிலிருந்து சமூக விரோத சக்திகள் ஊடுருவாமல் தடுக்க கண்காணிப்பு கூட்டப்பட்டுள்லதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி போலீஸார் எல்லையில் சோதனை முறையை நடைமுறைப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஷாஹீன்பாக் போராட்டம் குறித்த உச்ச நீதிமன்ற விசாரணை வரவிருக்கும் நிலையில் போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பல விதங்களில் பொய்ச்செய்தியும் வதந்தியும் பரப்பப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். சரிபார்க்கப்படாத வதந்திகளை ஊடகங்களும் பரப்பாமல் பொறுப்புடன் மக்களிடம் விஷயங்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வதந்திகளைத் தடுக்க மூத்த போலீஸ் அதிகாரிகளை கட்டுப்பாட்டு அறைகளில் நியமித்து பொய்களை உடனடியாகக் களையவும் அவர் போலீஸ் கமிஷனரைக் கேட்டுக் கொண்டார்.

மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் உள்ளூர் பிரதிநிதிகளை அழைத்து பரபரப்பான பகுதிகளில் கூட்டங்களை நடத்த அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். போலிஸ் அதிகாரிகள் பிரச்சினைக்குரிய காவல்நிலையங்களை உடனடியாகச் சென்று பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் வன்முறைகளுக்குத் தூபம் போடும் விதமான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

துவேஷப் பேச்சுகளுக்கும் வெறுப்புணர்வுப் பேச்சுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படுவதை போலிசார் உறுதி செய்ய வேண்டும் என்று கூறிய அமித் ஷா போலீசார் இது தொடர்பாக ஏற்கெனவே எச்சரிக்கைகளை விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் டெல்லி போலீஸார் மீதான தேவையற்ற, தவறான விமர்சனங்களைத் தவிர்க்கக் கூறிய ஷா, இதனால் போலீஸ் படையினரின் உணர்வு பாதிக்கப்படும் என்றார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறைச் செயலர் அஜய் பல்லா, ஐபி புலனாய்வு அமைப்பின் இயக்குநர் அர்விந்த் குமார், காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா, பாஜகவின் மனோஜ் திவாரி மற்ரும் ராம்வீர் பைதூரி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x