Published : 25 Feb 2020 09:26 AM
Last Updated : 25 Feb 2020 09:26 AM
தலைநகர் டெல்லியில் ஜாஃப்ராபாத், மவ்ஜ்பூர், பாஜன்புரா பகுதிகளில் சிஏஏ எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த சண்டையில் தலைமைக் காவலர் ஒருவர் உட்பட 4 ஆர்ப்பாட்டாக்காரர்களுடன் மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த வன்முறை வகுப்புவாத கலவரமாக மாறி இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கல்வீசித் தாக்குதல் நடத்திக் கொண்டதோடு கடைகள், வாகனங்களுக்குட் தீ வைக்கப்பட்டன.
அமெரிக்க அதிபர் தங்குமிடம் மத்திய டெல்லியாகும், கலவரம் மூண்டது வடகிழக்கு டெல்லி, மத்திய டெல்லியிலிருந்து வடகிழக்கு டெல்லி 20 கிமீ தூரமே உள்ளது. இன்று ராஜ்காட், ராஷ்ட்ரபதிபவனுக்கு வருகை தருகிறார் அதிபர் ட்ரம்ப்.
இந்த வன்முறைக்கு தலைமைக் காவலர் ரத்தன் லால் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். கோகுல்புரியில் நடந்த வன்முறையில் கல் ஒன்று தலையைத் தாக்க கான்ஸ்டபில் ரத்தன் லால் உயிரிழந்தார்.
டிசிபி அமித் ஷர்மா, ஏசிபி அனுஜ், இன்னொரு தலைமைக் காவலர் சத்ரபால், ஆகியோருக்கும் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த வன்முறைச் சம்பவத்தில் சுமார் 50 பேர் காயமடைந்ததாக மருத்துவர் கல்ரா தெரிவித்தார். வன்முறையில் சிஏஏ எதிர்ப்பாளர்கள் இரண்டு கார்களை எரித்தனர்.இதற்குப் பதிலடியாக சிஏஏ ஆதரவு போராட்டக்காரர்கள் 4 கடைகளை எரித்தனர்.
சுமார் 100 போலீஸ் அங்கு காவல்பணியில் இருக்கும் போதே இந்த வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. ஆனால் இவர்கள் வாளாவிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே ஜஃப்ராபாத் பகுதியில் வன்முறையின் போது துப்பாக்கியை ஏந்திய படி சுட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பெயர் ஷாருக்கான் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. போலீஸ் அவரிடமிருந்து துப்பாக்கி ஒன்றை பறிமுதல் செய்திருக்கின்றனர்.
வன்முறைகளை அடுத்து இந்த இடங்களில் துணை ராணுவப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு டெல்லியில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் செவ்வாயன்று செயல்படாது என்று துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT