Published : 24 Feb 2020 08:47 PM
Last Updated : 24 Feb 2020 08:47 PM
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மகாத்மா காந்தியின் சம்பர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்தார். அதில் வருகையாளர்கள் பதிவேட்டில் மகாத்மா காந்தி பற்றி எந்த ஒரு குறிப்பையும் கூறாமல் சென்றிருப்பது நெட்டிசன்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் வருகையாளர் பதிவேட்டில், ட்ரம்ப், “என்னுடைய கிரேட் ஃப்ரெண்ட் மோடிக்கு. இந்த அருமையான பயணத்துக்கு நன்றிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சபர்மதி ஆசிரமத்துக்கு வந்து விட்டு மகாத்மா காந்தியின் பெயரைக் குறிப்பிடாத ட்ரம்ப்பின் செய்கையை முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அதில் அப்போது மும்பையில் காந்தி வழக்கமாகத் தங்கும் மணி பவனுக்கு வருகை தந்த ஒபாமா வருகையாளர் பதிவேட்டில், “காந்தியின் வாழ்க்கைக்கு அச்சாரமாக விளங்கும் இதைப் பார்த்தது எனக்குக் கிடைத்த சிறப்பு, இதன் மூலம் நம்பிக்கையும் ஊக்கமும் என்னுள் நிறைகிறது. காந்தி இந்தியாவுக்கு மட்டும் நாயகர் அல்ல, உலகிற்கே நாயகர்” என்று குறிப்பிட்டதை நெட்டிசன்கள் உதாரணமாகக் காட்டி பதிவிட்டு வருகின்றனர். இது நடந்தது 2010-ல்.
பிறகு 5 ஆண்டுகள் சென்று 2015-ல் டெல்லி ராஜ்காட் வருகை தந்த ஒபாமா எழுதிய போது, “டாக்டர் மார்டின் லூதர் கிங் ஜூனியர் சொன்னது இன்றும் உண்மையே. காந்தியின் ஆன்மா இன்றளவும் இந்தியாவில் உயிருடன் இருக்கிறது. இது உலகிற்கு ஒரு பெரிய பரிசாகும். அனைத்து மக்களுடனும் தேசங்களுடனும் நாம் அன்பின் உணர்வுடன் வாழ்வோமாக” என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி, தன் ட்விட்டர் பக்கத்தில் பராக் ஒபாமாவின் பதிவையும் ட்ரம்ப் பதிவையும் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
முன்னாள் திரிபுரா எம்.எல்.ஏ. தபச் தேவ் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “பாபுஜி மகாத்மா காந்தி பற்றி குறிப்பிடவில்லை, மாறாக ட்ரம்ப் பிரதமர் மோடியைக் குறிப்பிட்டிருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT