Published : 24 Feb 2020 07:50 PM
Last Updated : 24 Feb 2020 07:50 PM
இந்தியாவுக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு கவுரவமளிக்கும் விதமாக செவ்வாய்கிழமை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிகாரப்பூர்வ விருந்தளிக்கிறார். இதில் எந்த ஒரு காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொள்ளப்போவதில்லை என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விருந்துக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், லோக்சபா காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்குக் குடியரசுத் தலைவர் மாளிகை விருந்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளது.
ஆனால் காங்கிரஸ் தலைவரும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவருமான சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதால் காங்கிரஸ் கட்சி இந்த விருந்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளது.
வருகை தந்திருக்கும் அமெரிக்க அதிபருடன் ஏதாவது ஒரு விதத்தில் எதிர்கட்சியினர் சந்திப்பு மேற்கொள்ள முடியும் எனில் அது இந்த விருந்தில் கலந்து கொள்வதன் மூலமே நடைபெறும்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, தான் விருந்தில் கலந்து கொள்ளாதது தனிப்பட்ட முடிவு என்றார். அகமதாபாத்தில் ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் தலைவர்களை அழைக்காமல் விடுத்ததற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.
“அமெரிக்கா, ஹூஸ்டனில் ஹவ்டி மோடி நிகழ்ச்சி நடைபெற்ற போது குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் என இருதரப்பினரும் அழைக்கப்பட்டனர். இப்படியிருக்கையில் அகமதாபாத் நிகழ்ச்சிக்கு ஏன் காங்கிரஸ் அழைக்கப்படவில்லை?
காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை என்னவெனில் வெளிநாட்டிலிருந்து அதிபர், பிரதமர்கள் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர்களிடத்திலும் பேச்சுவார்த்தை நடைபெறும். ஐமுகூ ஆட்சியில் அதிபர் பராக் ஒபாமா வந்த போது எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்தார்” என்றார்.
மாநிலங்களவையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா கூறும்போது, ஜிஎஸ்பி அந்தஸ்திலிருந்து இந்தியா விலக்கப்பட்டது, ஹெச்1பி விசாக்கள் குறைப்பு, அமெரிக்காவில் இந்திய ஊழியர்களின் செக்யூரிட்டி டெபாசிட்கள் பற்றிய கவலைகளை ட்ரம்பிடத்தில் இந்தியா எழுப்ப வேண்டும் என்றார்.
“அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கான அமெரிக்க அதிபரின் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு விஸ்தரிப்பாக இது அமைந்து விடக்கூடாது. இன்னொரு நாட்டின் தேர்தல் பிரச்சாரத்தின் செயல்பூர்வ அங்கமாக நாம் மாறிவிடக் கூடாது. இதே தவறுதான் டெக்ஸாசில் ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் நடந்தது. இவையெல்லாம் தவறான முன்னுதாரணத்துக்கு வழிவகுக்கும் என்பதில் பிரதமர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார் ஆனந்த் சர்மா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT