Published : 24 Feb 2020 09:35 AM
Last Updated : 24 Feb 2020 09:35 AM
'தி இந்து' ஆங்கில நாளிதழ் சார்பில் 4-ம் ஆண்டு ‘தி ஹடில் -2020' (The Huddle-கூடுகை - மாற்றத்துக்கான உரையாடல்) இருநாள் நிகழ்வு பெங்களூருவில் உள்ள தனியார் விடுதியில் நேற்று முன் தினம் தொடங்கியது. அரசியல், பொருளாதாரம், கல்வி, கலை, விளையாட்டு ஆகியவை தொடர்பாக 15 அமர்வுகளில் 32 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று உரையாற்றினர்.
இறுதிநாளான நேற்று ‘தி இந்து' குழுமத் தலைவர் என்.ராம், தெற்காசிய பிராந்தியத்தில் மேற்கொள்ள வேண்டிய பொருளாதார நடவடிக்கைகள் குறித்து இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உடன் கலந்துரையாடினார். அப்போது ரணில் கூறியதாவது:
மொகஞ்சதாரோ ஹரப்பா நாகரிக காலத்தில் இருந்து இந்தியாவுக்கும், இலங்கை, மியான்மர், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவு இருந்துள்ளது. மவுரியர்களின் ஆட்சியில் இந்த உறவு மேம்பட்டதுடன், பவுத்தம் பரவியதன் வாயிலாக கடல் தாண்டிய வியாபார தடைகள் நீங்கின. 9-ம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட பல்லவர்கள் வங்காள விரிகுடா கடலில் வர்த்தகம் மேற்கொள்வது தொடர்பாக இலங்கை அனுராதாப்புரம் மன்னருடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
20-ம் நூற்றாண்டின் இறுதி வரை நாட்டுக்கோட்டை செட்டியார்கள் இந்தியா மட்டுமல்லாமல் இலங்கை, மியான்மர்,மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் 1500க்கும் மேற்பட்ட தொழில்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
காலனிய ஆட்சிக் காலத்தில் இருந்து முதலில் விடுபட்ட இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் உள்ளிட்ட நாடுகள் இத்தகைய வர்த்தக உறவை மேம்படுத்த தவறிவிட்டன. இதனை மேம்படுத்த ஒவ்வொரு நாடும் அவ்வப்போது முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், அண்டை நாடுகளுக்கு இடையே நீடிக்கும் சிக்கலால் அதனை சரியான திசையில் கொண்டு செல்ல முடியாமல் போகிறது. இதனை சரி செய்யும் விதமாக சார்க் நாடுகள் கூட்டமைப்பு, தெற்காசிய நாடுகள் அமைப்பு, வங்காள விரிகுடா பன்தொழில்,தொழில்நுட்ப மற்றும் பொருளாதார கூட்டமைப்பு உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டது.
இந்த அமைப்புகள் செயல்பட்டபோதிலும் இன்னும் ஒருங்கிணைந்த பொருளாதார திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் 1950களுக்கு முன்பு வரை தெற்காசிய நாடுகள் என்றாலே இந்திய துணைக் கண்டத்தையே குறிக்கும். தெற்காசிய நாடுகளுக்கு இடையே ஏற்றுமதிக்கான அடிப்படை கட்டமைப்பு வசதியும், அனைத்து வகையான தொழில் புரிவதற்கான உகந்த சூழலும் இருக்கிறது. எனவே இந்தியா மைய வர்த்தக பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்.
அண்மைக்காலமாக சீனா மைய பொருளாதார கட்டமைப்பு உருவாகிவரும் நிலையில், தெற்காசிய அரசியலில் இந்தியா கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே தெற்காசிய அரசியல் மட்டுமல்லாமல் பொருளாதாரம், கட்டமைப்பு மேம்பாடு, ஒருங்கிணைந்த திட்டங்கள் ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். தெற்காசிய நாடுகளுக்கு இடையே நட்புறவை வலுப்படுத்தி தொழில் ரீதியான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமை ஏற்பட்டால் இந்த பிராந்தியம் உலகின் 4ம் பெரிய பொருளாதார மண்டலமாக மாறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தி இந்து குழும பத்திரிகைகளின் பதிப்பாளர் என்.ரவி,முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் நிரூபமா ராவ், பாஜக தேசிய செயலாளர் ராம் மாதவ், பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, பகுஜன் சமாஜ் எம்பி ரித்தேஷ் பாண்டே, முன்னாள் கிரிக்கெட் வீரர் அணில் கும்ளே ,நடிகை மனிஷா கொய்ராலா உள்ளிட்டோரும் பங்கேற்று உரையாற்றினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT