Last Updated : 23 Feb, 2020 08:16 PM

2  

Published : 23 Feb 2020 08:16 PM
Last Updated : 23 Feb 2020 08:16 PM

டெல்லியில் சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்: போலீஸார் கண்ணீர் புகை குண்டுவீச்சு

டெல்லி ஜாப்ராபாத் பகுதியில் இன்று சிஏஏ எதிர்பாளர்களும், ஆதரவாளர்களும் மோதிக் கொண்ட காட்சி: படம் | ஏஎன்ஐ.

புதுடெல்லி

மத்திய அரசு கொண்டுவந்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் பிரிவினருக்கும், சிஏஏ சட்டத்துக்கு ஆதரவாக இருக்கும் பிரிவினருக்கும் இடையே டெல்லி ஜாப்ராபாத் பகுதியில் இன்று பெரும் மோதல் ஏற்பட்டது.

இருதரப்பினரும் கற்களையும், பாட்டில்களையும் வீசி தாக்கிக் கொண்டனர். நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தினரைக் கலைத்தனர். இதன் காரணமாக, மஜ்பூர்-பாபர்பூர் இடையிலான மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன

ஜாப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண்கள் போராட்டம் நடத்தும் காட்சி: படம் | ஏஎன்ஐ.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஷாகீன் பாக் பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே டெல்லியின் தென்கிழக்குப் பகுதியான ஜாப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று இரவு முதல் முஸ்லிம்பெண்கள் 500-க்கும் மேற்பட்டோர் சிஏஏவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் ஜாப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டு, கதவுகள் பூட்டப்பட்டு பலத்த போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டது.

பெண்கள் கைகளில் தேசியக் கொடி ஏந்தியும், சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜாப்ராபாத் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ள காட்சி : படம் | ஏஎன்ஐ.

இதனால், சீலம்பூர் மற்றும் மஜ்பூர், யமுனா விஹார் இடையிலான 66-வது சாலைப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் பலமுறை போராட்டக்காரர்களிடமும், பெண்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் சிஏஏவை திரும்பப் பெறும்வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தனர். இந்நிலையில் அங்கு பெண் போலீஸார் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜாப்ராபாத் பகுதியில் சாலை மூடப்பட்டிருப்பதைக் கண்டித்து சிஏஏவுக்கு ஆதரவாகச் சிலர் இன்று பிற்பகலில் திரண்டனர். அப்போது சிஏஏ எதிர்ப்பாளர்களும் திரண்டனர். இரு தரப்பினரும் திடீரென ஒருவர் மீது ஒருவர் கற்களையும், பாட்டில்களையும் வீசியதால், அந்த இடமே கலவரக் கோலமாக மாறியது.

இதையடுத்து அங்கிருந்த போலீஸார் இரு தரப்பினரையும் விரட்ட முயன்றும் முடியாததால், கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தினரைக் கலைத்தனர். இரு தரப்பினரும் மோதிக்கொண்டதால் அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.

டெல்லி மாநில பாஜக தலைவர் கபில் மிஸ்ரா ட்விட்டரில் கூறுகையில், "டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், சாந்த்பாக் சாலையைச் சீரமைத்து, மக்கள் போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்தித் தர போலீஸாருக்கு 3 நாட்கள் அவகாசம் தருகிறோம். டெல்லியில் உள்ள போராட்டக்காரர்கள் மக்களுக்குப் பெரும் இடையூறு விளைவிக்கிறார்கள். அதனால்தான் போலீஸார் சாலையை மூடியுள்ளனர். அதனால்தான் அந்தப் பகுதி கலவரக் கோலமாகக் காட்சி அளிக்கிறது. நாங்கள் யாரும் கல்வீசவில்லை. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்து திரும்பும் வரை, அமைதியாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x