Published : 23 Feb 2020 07:31 PM
Last Updated : 23 Feb 2020 07:31 PM
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு பிரதமர் மோடியின் முதலாளித்துவ நண்பர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி மதிப்பிலான கடனைத் தள்ளுபடி செய்துள்ளது. அவர்களின் பெயரை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா நேற்று ட்விட்டரில் ஒரு அறி்க்கை பதிவிட்டிருந்தார். அதில், குளோபல் சர்வீஸ்சஸ் கம்பெனி கிரெடிட் சூயிஸ் வெளியிட்ட அறிக்கையைச் சுட்டிக்காட்டினார்.
" கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தனது கோடீஸ்வர நண்பர்களுக்காக ரூ.7 லட்சத்து 77 ஆயிரத்து 800 கோடியைத் தள்ளுபடி செய்துள்ளது. ஏன் விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி வழங்கவில்லை?
வங்கியில் இருக்கும் மக்களின் பணத்துக்கு யார் பாதுகாப்பு? வங்கிகள் கடன் தள்ளுபடி செய்த தொகையும், வாராக்கடன் அளவும் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து மோடி அரசு ரூ.7.77 லட்சம் கோடி கடன் தொகையைத் தள்ளுபடி செய்துள்ளது" என ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்திருந்தார்.
இந்த ட்வீட்டைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் கடன் தள்ளுபடி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரியங்கா காந்தி பதிவிட்ட ட்வீட்டில், "பிரதமர் மோடியின் முதலாளி நண்பர்களுக்காக பாஜக அரசு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.8 லட்சம் கோடி கடன் தொகையைத் தள்ளுபடி செய்துள்ளது.
கறுப்புப் பணம் வைத்திருக்கும் இவர்களின் பெயரை வெளிப்படையாக, மக்கள் மன்றத்தில் மத்திய அரசு அறிவிக்கவில்லை. பெரும் தொழிலதிபர்களுக்குக் கடன் தள்ளுபடி செய்வதற்கு என்ன விதமான அடிப்படை அளவுகள் பின்பற்றினீர்கள்? எந்த முறையில் கடன் தள்ளுபடி செய்தீர்கள்?
தேசத்தின் விவசாயிகள் கடன் சுமையால் இருக்கும்போது, எந்தக் கொள்கையின் அடிப்படையில் பணக்கார நண்பர்களுக்குக் கடன் மன்னிப்பு அளிக்கப்பட்டது? இந்தக் கேள்விகளை அரசு புறக்கணிக்க முடியாது. கடன் தள்ளுபடி பெற்றவர்கள் பெயரை வெளியிட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
பிரியங்கா காந்தி, ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோரின் கேள்விக்கு இதுவரை பாஜக தரப்பிலோ அல்லது மத்திய அரசு தரப்பிலோ எந்தவிதமான பதிலும் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT