Published : 23 Feb 2020 04:31 PM
Last Updated : 23 Feb 2020 04:31 PM
இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிடம் ஹெச்-1பி விசாவை இந்தியர்களுக்கு எளிமையாக்குவது, இந்தியாவுக்கு மீண்டும் ஜிஎஸ்பி அந்தஸ்து வழங்குவது போன்ற விவகாரங்கள் எழுப்பப்படுமா என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாட்கள் பயணமாக நாளை இந்தியா வருகிறார். அகமதாபாத்தில் உள்ள மோதிரா அரங்கை திறந்து வைக்கும் ட்ரம்ப்பும், பிரதமர் மோடியும் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''அமெரிக்கா முதலில் இருக்க வேண்டும் எனக் கூறும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு முதல் முறையாக வரும்போது, பிரதமர் மோடி ஏன் அமைதியாக இருக்கிறார்?
ட்ரம்ப்பின் இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடி சில விஷயங்களை அவரிடம் கேட்பாரா?
ஈரான் நாட்டிலிருந்து இந்தியா கச்சா எண்ணெயை மலிவாக இறக்குமதி செய்து வந்தது. ஈரான் மீதான வர்த்தகத் தடையால் இந்தியாவால் இறக்குமதி செய்ய முடியவில்லை. ஆதலால், மலிவான விலையில் கச்சா எண்ணெய் கிடைக்க பிரதமர் மோடி உறுதி செய்வாரா?
இந்தியா 300 கோடி டாலர் ராணுவக் கொள்முதல் ஒப்பந்தம் செய்தபின், இந்தியாவின் ஸ்டீல் ஏற்றுமதி ஊக்கம் பெறுமா?
அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் இந்தியர்களுக்காக வழங்கப்படும் ஹெச்-1பி விசாவை ட்ரம்ப் அரசு கட்டுப்படுத்தியுள்ளது. இதனால் இந்தியர்களுக்கு விசா கிடைப்பதில் கெடுபிடி நிலவுகிறது. கடந்த 2015-ம் ஆண்டில் இந்தியர்களுக்கு விசா மறுப்பு 6 சதவீதமாக இருந்த நிலையில், 2019-ம் ஆண்டு 24 சதவீதமாக இருக்கிறது. இந்தச் சந்திப்பின்போது ஹெச்-1பி விசா விவகாரத்தைப் பிரதமர் மோடி எழுப்புவாரா?
கந்தகாரில் ஐசி-814 விமானம் கடத்தப்பட்டபோது, நாம் தீவிரவாதி மசூத் அசாரை விடுவித்தது நினைவிருக்கும். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் தலைமையிலான படைதான் நாடாளுமன்றத் தாக்குதலையும், புல்வாமா தாக்குதலையும் நடத்தியது. இந்தச் சூழலில் இந்தியாவின் பாதுகாப்புக் கவலைகளை ட்ரம்ப்பிடம் எழுப்புவாரா மோடி?
கடந்த 1974-ம் ஆண்டிலிருந்து இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த ஏற்றுமதி சிறப்பு அந்தஸ்து நாடு என்ற ஜிஎஸ்பி சலுகையை ட்ரம்ப் அரசு கடந்த 2019, ஜூன் மாதம் ரத்து செய்துவிட்டது. இதனால், இந்தியாவின் 560 கோடி டாலர் அளவுக்கு ஏற்றுமதி பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக நகைகள், விலை உயர்ந்த கற்கள், அரசி, தோல் பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
ஹவுடி மோடி, இப்போது நமஸ்தே ட்ரம்ப் போன்ற நிகழ்ச்சிகள் நடக்க இருக்கும்போது மீண்டும் இந்தியாவுக்கு ஜிஎஸ்பி அந்தஸ்து கிடைக்க மோடி பேசுவாரா?
அமெரிக்காவின் தடையால் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது. ஈரான் அரசு கச்சா எண்ணெய்க்குப் பதிலாக இந்தியா ரூபாயில் வர்த்தகம் செய்யச் சம்மதித்தது, 90 நாட்கள் கடனும் கிடைத்தது. இந்தியாவுக்கே வந்து கச்சா எண்ணெயை இறக்கிக் கொடுத்தது. ஆனால் அமெரிக்க விதித்த தடையால் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதில்லை. அகமதாபாத்தில் விருந்து அளிக்கும்போது ட்ரம்ப்பிடம் கச்சா எண்ணெய் விவகாரத்தைப் பற்றி மோடி பேசுவாரா?''
இவ்வாறு ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்விகளை எழுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT