Published : 23 Feb 2020 01:57 PM
Last Updated : 23 Feb 2020 01:57 PM
இந்தியாவின் பல்லுயிர் சூழல் என்பது தனித்துவமானது. அதைப் பராமரித்து, பாதுகாப்பது அவசியம் என்று 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம், இந்திய வானொலியில் “மனதின் குரல்” என்ற நிகழ்ச்சியைப் பிரதமர் தொடங்கி மக்களிடம் பேசினார். அப்பேது முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அவர் பல்வேறு சமூகப் பிரச்சினைகள், சாதித்த இந்தியர்கள், நாட்டில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள் குறித்துப் பேசி வருகிறார்.
இந்த மாதம் பிரதமர் மோடி 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசியதாவது:
''டெல்லியின் ஹுனர் ஹாட்டில் நாட்டின் விசாலத்தன்மை, கலாச்சாரம், பாரம்பரியம், உணவுப் பழக்கங்கள், பன்முகத்தன்மை ஆகியவற்றை என்னால் காண முடிந்தது. பாரம்பரியமான ஆடைகள், கைவினைப் பொருட்கள், ஆந்திரத்தின் அருமையான தோல் பொருட்கள், தமிழ்நாட்டின் அழகான ஓவியங்கள், என ஒட்டுமொத்த தேசத்தின் கலை மற்றும் கலாச்சாரத்தின் வெளிப்பாடு அற்புதமானதாக இருந்தது
மகத்தான பாரம்பரியங்களை நமது முன்னோர்கள் சொத்தாக நமக்கு அளித்திருக்கிறார்கள். ஜீவராசிகளிடத்தில் அன்பை வெளிப்படுத்துவது, இயற்கையின்பால் நேசம், போன்றவை நமது கலாச்சாரப் பாரம்பரியக் கொடை. ஆண்டு முழுவதிலும் பல புலம்பெயர் பறவை இனங்களுக்குப் புகலிடமாக இந்தியா விளங்குகிறது. காந்தி நகரில் சிஓபி-13 மாநாட்டில் பறவைகளின் பாதுகாப்பு பற்றி விவாதிக்கப்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகள் வரை இந்தியா மாநாட்டுக்குத் தலைமை வகிக்கும் என்பதால், உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்க வேண்டும்.
மேகாலயாவில் உயிரியலாளர்கள், ஒரு புதிய வகை மீன் இனத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவை மேகாலயத்தின் குகைகளுக்குள்ளே மட்டுமே காணப்படும். நீர்வாழ் உயிரினங்களிலேயே மிகப் பெரியதாக இந்த மீன் கருதப்படுகிறது. ஒளி புக முடியாத இடங்களிலும்கூட, இருள் நிறைந்த, ஆழமான நிலத்தடிக் குகைகளுக்கு உள்ளே இந்த மீன் வாழ்கிறது. விஞ்ஞானிகளுக்கும் இந்தத் தகவல் ஆச்சரியத்தை அளிக்கிறது.
மகத்துவம் வாய்ந்த பெண் புலவரான அவ்வையார் கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு என்றார். நமது நாட்டின் பன்முகத்தன்மை விஷயத்திலும் இதுதான் உண்மை. அது பற்றி நாம் அறிந்திருப்பது மிகக் குறைவே. நமது பல்லுயிர்த்தன்மையும் மனித சமுதாயம் முழுவதற்குமான ஒரு அற்புதமான பொக்கிஷம். இதை நாம் பாதுகாக்க வேண்டும், பராமரிக்க வேண்டும், மேலும் ஆய்வு செய்ய வேண்டும்.
குழந்தைகள், இளைஞர்கள் அறிவியல் மனப்பாங்கை வளர்க்க, ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் விண்கலங்கள் ஏவப்படும்போது அருகே இருந்து பார்க்க மக்களுக்கும் அனுமதி தரப்பட்டிருக்கிறது. பார்வையாளர் மாடம் ஏற்படுத்தப்பட்டு, அங்கிருந்து 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்க ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இஸ்ரோவின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பு வாயிலாக இணைய வழியிலேயே நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
12 வயதுச் சிறுமி காம்யா கார்த்திகேயன் தென் அமெரிக்காவின் அன்டெஸ் மலைகளின் மிகப்பெரிய சிகரமான 7000 மீட்டர் ஏறி மூவர்ணக் கொடியைப் பறக்க விட்டிருக்கிறார். காம்யாவுக்கு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேரளாவின் கொல்லத்தில் வசிக்கும் 105 வயதான பாகீரதி அம்மா சிறுவயதில் பாதிக்கப்பட்ட தனது பள்ளிப்படிப்பைத் தொடர்ந்து 4 ஆம் வகுப்பு தேர்வு எழுதி 75 சதவீத மதிப்பெண்களுடன் தேறியுள்ளார். பாகீரதி அம்மா போன்றோர் தாம் இந்த நாட்டின் பலம். அவருக்கு எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடு முழுவதிலும் மஹாசிவராத்திரி கொண்டாடப்பட்டது. ஹோலிப் பண்டிகை, குடீ-பட்வா பண்டிகை ஸ்ரீ ராமநவமி நாள் வருகிறது. பண்டிகையும் நமது நாட்டின் சமூக வாழ்க்கையின் இணை பிரியா அங்கங்கள். ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் சமூகத்துக்கு ஒரு செய்தி மறைந்திருக்கிறது. இது சமூகத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டையுமே ஒற்றுமையாக இணைத்து வைக்கிறது. ஹோலிக்குப் பின் இந்திய விக்ரமீ புத்தாண்டுத் தொடங்க உள்ளதால், வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT