Published : 23 Feb 2020 08:04 AM
Last Updated : 23 Feb 2020 08:04 AM
குடியுரிமை சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவை குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அங்கு சிவசேனா-பாஜக கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது. முதல்வர் பதவி யாருக்கு என்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜக கூட்டணியிலிருந்து சிவசேனா வெளியேறியது.
இதனிடையே உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி (மகாராஷ்டிர விகாஸ் முன்னணி) ஆட்சி அமைந்தது. முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல்முறையாக பிரதமர் மோடியை உத்தவ் தாக்கரே டெல்லியில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, அவரது மகனும், மாநில அமைச்சருமான ஆதித்ய தாக்கரே உடனிருந்தார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பின்னர், உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல்வரான பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடியைச் சந்தித்தேன். மகாராஷ்டிரா மாநிலம் தொடர்புடைய பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தினேன். மகாராஷ்டிர அரசுக்கு தேவையான ஒத்துழைப்பை மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் என்னிடம் உறுதியளித்துள்ளார். சிஏஏ, என்பிஆர், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவை குறித்தும் அவருடன் விவாதித்தேன்.
சிஏஏ, என்பிஆர் ஆகியவை தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இந்த நடவடிக்கைகளால் நாட்டிலிருந்து யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, அவரது இல்லத்தில் உத்தவ் தாக்கரே சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நீடித்தது.
இச்சந்திப்பின்போது, ஆதித்ய தாக்கரே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் ஆகியோர் உடனிருந்தனர்.
மகாராஷ்டிராவில் நிலவி வரும் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், சிஏஏ, என்பிஆர் ஆகியவை தொடர்பாகவும் சோனியா காந்தியுடன் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
மகாராஷ்டிராவில் கூட்டணி அரசின் செயல்பாடுகள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
தேசியவாத காங்கிரஸ் அதிருப்தி
இதனிடையே சிஏஏ, என்பிஆர் ஆகிய விவகாரங்களில் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் நிலைப்பாடு தொடர்பாக தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சூழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் உத்தவ் தாக்கரே சந்தித்துப் பேசியுள்ளது தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT