Published : 23 Feb 2020 07:07 AM
Last Updated : 23 Feb 2020 07:07 AM
தவறான நோக்கத்தில் ஒருபோதும், யாராலும் உண்மையை மறைக்க முடியாது. எத்தனைப் பேர் சேர்ந்து எவ்வளவு மறைக்க முயற்சித்தாலும் உண்மை நிச்சயம் வெளிப்படும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
'தி இந்து' ஆங்கில நாளிதழ் சார்பில் 4-ம் ஆண்டு ‘தி ஹடில் -2020' (The Huddle-கூடுகை - மாற்றத்துக்கான உரையாடல்) இருநாள் நிகழ்வு பெங்களூருவில் உள்ள தனியார் விடுதியில் நேற்று தொடங்கியது. அரசியல், பொருளாதாரம், கல்வி, கலை, விளையாட்டு ஆகியவை தொடர்பாக 15 அமர்வுகளில் 32 சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றுகின்றனர். நேற்று காலை நடந்த தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கர்நாடக ஆளுநர் வாஜூபாய்வாலா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ‘தி இந்து' குழுமத் தலைவர் என்.ராம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இரு நாள் விவாத நிகழ்வை தொடங்கி வைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
சென்னையை சேர்ந்த துடிப்பான 6 இளைஞர்கள் 1878-ம் ஆண்டு தொடங்கிய ‘தி இந்து' நாளிதழ் நூற்றாண்டை கடந்து கம்பீரமாக வெற்றிநடைப் போடுகிறது. சுதந்திர போராட்ட காலத்தில் மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டியதுடன், சுதந்திரத்துக்கு பின் நாடு சரியான திசையில் பயணிக்க உறுதுணையாக இருக்கிறது. இதனால்தான் மகாத்மா, ‘தி இந்து' நாளிதழை இந்தியாவின் சிறந்த பத்திரிகை என புகழ்ந்தார். அதே வார்த்தைகளை நான் இன்றும் பயன்படுத்தும் அளவுக்கு இந்த நாளிதழ் சிறந்து விளங்குகிறது.
உண்மையை எடுத்துரைப்பது, சுதந்திரம், நீதி, மனித நேயம், சமூக நலனில் அக்கறை ஆகிய ஐந்து அடிப்படை கொள்கைகளுடன் ‘தி இந்து' குழும இதழ்கள் இயங்கி வருகின்றன. இதனையே இக்குழும தலைவர் என்.ராம், பத்திரிகை துறையின் பஞ்சசீலம் என குறிப்பிடுகிறார். ‘தி இந்து' குழும இதழ்கள் இந்திய திருநாட்டின் உண்மை செய்திகளை மிகுந்த பொறுப்புடன், பாரம்பரிய தன்மையுடன் தொடர்ந்து பதிவு செய்கின்றன.
தொலைக்காட்சி விவாதங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில், பாரம்பரியம் வாய்ந்த ‘தி இந்து' நாளிதழ் மாற்றத்துக்கான உரையாடலை சரியாக முன்னெடுக்கும் என நம்புகிறேன். விவாதம், கலந்தாய்வு, கருத்து பகிர்வு ஆகியவைதான் உண்மையை வெளிக்கொணர்ந்து, நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும். தவறான நோக்கத்தில் ஒருபோதும், யாராலும் உண்மையை மறைக்க முடியாது. எத்தனைப் பேர் சேர்ந்து எவ்வளவு மறைக்க முயற்சித்தாலும் உண்மை நிச்சயம் வெளிப்படும். உண்மையை பொறுத்தவரை உங்களது உண்மை; என்னுடைய உண்மை என இரண்டு இருக்க முடியாது. உண்மை எப்போதும் ஒரே முகத்துடன்தான் இருக்கும். மகாத்மா காந்தி காட்டிய வழியில் இடைவிடாமல் உண்மையை தேடும் பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல்,பாஜக எம்பி ராஜீவ் சந்திர சேகர், காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி, முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், நடிகை தாப்ஸி பன்னு உள்ளிட்டோரும் பங்கேற்று உரையாற்றினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT