Published : 22 Feb 2020 08:19 PM
Last Updated : 22 Feb 2020 08:19 PM
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் இந்திய வருகைக்காக ஏராளமான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், அவர் பயன்படுத்தும் விமானம், ஹெலிகாப்டர், கார் அனைத்தும் அகமதாபாத் வந்து சேர்ந்துள்ளன.
அமெரிக்க அதிபருக்குப் பாதுகாப்பு அளிக்கும் "சீக்ரெட் சர்வீஸ்" பிரிவினரும் இந்தியா வந்துவிட்டார்கள். அவர்களிடம், அதிபர் பாதுகாப்புப் பொறுப்பை ஒப்படைத்துள்ள இந்திய எஸ்பிஜி, என்எஸ்ஏ பிரிவினர் அவர்களுக்கு உதவி வருகின்றனர்.
அதிபருக்குப் பாதுகாப்பு அளிக்கும் சீக்ரெட் சர்வீஸ் படையினர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே இந்தியா வந்து அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நிமிடத்துக்கு நிமிடம் கண்காணித்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் மட்டும் பயன்படுத்தும் பிரத்யேக 'மரைன் ஒன்' ஹெலிகாப்டர், 'தி பீஸ்ட் கார்' ஆகியவை பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், உலகையே அழிவுக்குள்ளாக்கும் ஒரு பொருளை அமெரிக்க அதிபர் எங்கு சென்றாலும் எடுத்துச் செல்லும் 'நியூக்ளியர் ஃபுட்பால்'(Nuclear Football) குறித்து பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மட்டுமல்ல அதற்குமுன்பு இருந்த அனைத்து அமெரிக்க அதிபர்களும் கடந்த 1962-ம் ஆண்டிலிருந்து இந்த ஃபுட்பால், பிஸ்கட் (Biscuit) ஆகிய இரு முக்கியப் பொருட்களை உடன் எடுத்து வருவார்கள்.
அது என்ன 'நியூக்ளியர் ஃபுட்பால்', 'பிஸ்கட்' என்று கேட்பது புரிகிறது.
நியூக்ளியர் ஃபுட்பால் என்றால் என்ன?
நியூக்ளியர் ஃபுட்பால் என்பது அமெரிக்க அதிபர் மட்டும் பயன்படுத்தும் ஒரு ப்ரீப்கேஸ். இதற்குப் பெயர்தான் நியூக்ளியர் ஃபுட்பால் . மேலும், 'ஆட்டோமிக் ஃபுட்பால்', 'பிரசிடென்ட் எமர்ஜென்சி சாட்செல்', 'தி பட்டன்', 'பிளாக்பாக்ஸ்' எனப் பல பெயர்கள் இருக்கின்றன
தோலால் செய்யப்பட்ட கறுப்பு நிற பைக்குப் பெயர்தான் நியூக்ளியர் ஃபுட்பால். இந்தப் பைக்குள் "ஜீரோ ஹாலிபுர்டன்" நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உறுதியான அலுமினியத்தால் உருவான சூட்கேஸ் இருக்கும். இதன் எடை 20 கிலோவாகும்.
இந்தப் பெட்டிக்குள்தான் உலகையே அழிக்கும் விஷயங்கள் இருக்கின்றன. அமெரிக்க ராணுவத்துக்கு அணுகுண்டுகளை வீசுவதற்கான ஒப்புதலை வழங்கும் "கோடிங் மெஷின்" இந்தப் பெட்டிக்குள் உள்ளது.
உலகின் எந்த மூலையில் அமெரிக்க அதிபர் இருந்தாலும், இந்தப் பெட்டியில் இருக்கும் ஆன்டனா, சாட்டிலைட் இணைப்பு மூலம் அமெரிக்க ராணுவத் தலைமையகம் பென்டகனுக்கு அணுகுண்டு வீசும் அனுமதியை அதிபர் அளிக்கலாம். இதற்குப் பெயர் லாஞ்ச் கோட்ஸ் அல்லது கோல்ட் கோட்ஸ் (Gold codes).
அந்த சூட்கேஸில் இருக்கும் பிரத்யேகக் கருவி மூலம் எந்த நாட்டின் மீதும் அணுகுண்டு வீசும் அனுமதியை ராணுவத் தலைவருக்கு அதிபர் "கோடிங்" மூலம் வழங்குவார்.
இந்த நியூக்ளியர் ஃபுட்பால் கைப்பையை அதிபரின் உதவியாளர் எப்போதும் உடன் எடுத்துச் செல்வார். அமெரிக்க அதிபர் உலகின் எந்த இடத்துக்குச் சென்றாலும் இந்த பை உடன் செல்லும். கடந்த 1962-ம் ஆண்டிலிருந்து இந்த நியூக்ளியர் ஃபுட்பால் முறை இருந்து வருகிறது.
பிஸ்கட் என்றால் என்ன
பிஸ்கட் என்பது டெபிட் கார்டு போன்று பிளாஸ்டிக்கால் ஆன ஒரு கார்டு. இந்த கார்டைப் பயன்படுத்திதான் அதிபர் அணுஆயுதம் வீசுவதற்கான அனுமதியை ராணுவத் தலைமைத் தளபதிக்கு வழங்குவார்.
அமெரிக்க அதிபர்களாக இருந்த ஜிம்மி கார்டர், ரொனால்ட் ரீகன் ஆகியோர் இருந்தபோது அந்த நியூக்ளியர் ஃபுட்பால் இல்லை. மாறாக அவர்கள் இந்த பிஸ்கட் கார்டை தங்கள் கோட்சூட் ஜாக்கெட்டில் வைத்திருந்தார்கள். கடந்த 1981-ம் ஆண்டு ரொனால்ட் ரீகனைக் கொலை செய்யும் முயற்சி நடந்த பின் உடனடியாக பிஸ்கட் கார்டு அமெரிக்க அதிபரிடம் இருக்கும் முறை ரத்து செய்யப்பட்டது.
அதன்பின்புதான் ஃபுட் பால் முறை கொண்டுவரப்பட்டு, அதிபருக்கு உதவியாளர் இந்த சூட்கேஸைக் கொண்டுவரும் முறை வந்தது. ஆனால், இந்த சூட்கேஸைக் கொண்டுவரும் உதவியாளர் பெரும்பாலும் ஊடகத்தினர் முன் வரமாட்டார். அவரைப் புகைப்படம் எடுக்கவும் அனுமதிக்கமாட்டார்கள். அதையும் மீறி சில நேரங்களில் நடப்பதுண்டு.
நியூக்ளியர் ஃபுட்பாலில் என்ன இருக்கும்?
நியூக்ளியர் ஃபுட்பால் எனப்படும் லெதர் ப்ரீப்கேஸில் ஒரு அலுமினிய சூட்கேஸ் இருக்கும். அதில் 4 வகையான பொருட்கள் இருக்கும்.
முதலாவது (23 × 30 செமீ ) நீளம் கொண்ட தி பிளாக் புக் என்று அழைக்கப்படும் 10 பக்கங்கள் கொண்ட நோட்டு. அதில் அவசர காலத்தில் ஒரு நாட்டுக்கு நாம் எவ்வாறு ராணுவ ரீதியில் பதிலடி கொடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும். ஒரு நாட்டை எந்த இடத்தில் தாக்குதல் நடத்தலாம் உள்ளிட்ட விவரங்கள் தொகுக்கப்பட்டு இருக்கும்.
இரண்டாவதாக ஒரு கவரில் 8 முதல் 10 பக்கங்கள் கொண்ட காகிதம் இருக்கும். அதில் அவசர நிலையை எவ்வாறு பிறப்பிப்பது என்பது குறித்த வழிமுறை குறிப்பிடப்பட்டு இருக்கும்.
மூன்றாவதாக [7.5 × 13 cm] நீளம் கொண்ட 3 கார்டுகள் இருக்கும். இந்த கார்டில் ரகசிய கோடிங் இருக்கும். இந்த கோடிங் மூலம்தான் அணு ஆயுதத் தாக்குதலுக்கு அனுமதி வழங்க முடியும்.
நான்காவதாக கறுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் அச்சிடப்பட்ட 75 பக்கங்கள் கொண்ட புத்தகம் இருக்கும். பிளாக் புக் மாதிரி இருக்கும் இந்தப் புத்தகத்தில் நாட்டின் பல்வேறு இடங்கள் குறித்த தொகுப்பு வழங்கப்பட்டிருக்கும். நாடு குறித்த முழுமையான விவரங்கள் இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT