Last Updated : 22 Feb, 2020 05:48 PM

1  

Published : 22 Feb 2020 05:48 PM
Last Updated : 22 Feb 2020 05:48 PM

காங்கிரஸ் தலைவராக மீண்டும் ராகுல் காந்தி வர வேண்டும்; அவரைச் சுதந்திரமாக முடிவெடுக்க விடுங்கள்: சல்மான் குர்ஷித் பேட்டி

ராகுல் காந்தி : கோப்புப்படம்

புதுடெல்லி

காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல் காந்தி வர வேண்டும் என்பதே பெரும்பாலான நிர்வாகிகளின் விருப்பமாக இருக்கிறது. அவரின் விருப்பத்துக்கு ஏற்ப முடிவெடுக்க விட வேண்டும் என மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்ததால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்று வருகிறார்.

இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கு முறையாகத் தேர்தல் நடக்காமல், தலைவரைத் தேர்வு செய்யாமல் தொண்டர்களும், நிர்வாகிகளும் சோர்ந்துள்ளார்கள். ஆதலால், தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த வேண்டும் எனக் கோரி மூத்த தலைவர்கள் சசி தரூர், சந்தீப் தீக்சித் ஆகியோர் குரல் எழுப்பினர்

இந்த சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பிடிஐ நிறுவனத்துக்கு பிரத்யேகப் பேட்டி அளித்தார்.

காங்கிரஸ் கட்சித் தலைமைக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என்று சசி தரூர், சந்தீப் தீக்சித் கூறியுள்ளார்களே?

காங்கிரஸ் கட்சி ஒரு கட்டத்தில் இருந்து மற்றொரு கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. கட்சித் தலைவராக சோனியா காந்தி இருப்பதால், தலைமைக்குச் சிக்கலும், பிரச்சினையும் இல்லை. கட்சித் தலைமைக்குக் கடந்த காலங்களில் தேர்தல் நடந்துள்ளது. தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்த வேண்டும் எனக் கூறுபவர்கள் கூட முன்பு தேர்தல் வேண்டாம் என்று கூறியவர்கள்தான். இரு கருத்துகளை வைக்கிறார்கள். இதுபோன்ற பேச்சுகள் ஊடகங்களில் பேசுவதால் எந்தவிதமான பலனும் இல்லை.

காங்கிரஸ் கட்சியை வழிநடத்த ராகுல் காந்தி சரியான தலைவரா?

இதைத்தான் நாங்கள் ஏற்கெனவே சொல்லிவிட்டோம். இனிமேல் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டும். இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் ராகுல் காந்தியைத் தலைவராக ஏற்றுக்கொண்டால், அவர் முடிவெடுக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். நேரம் அளிக்க வேண்டும். எதற்காக நமது கருத்துகளை அவர் மீது திணிக்கிறோம்.

ராகுல் காந்தி மீண்டும் தலைவராக வேண்டும் என்பது குறித்த கருத்து கட்சிக்குள் இருக்கிறதா?

ஆமாம். நிச்சயம் அதுபோன்ற கருத்து கட்சிக்குள் இன்னும் இருக்கிறது. பெரும்பாலான கட்சி நிர்வாகிகளின் விருப்பமே ராகுல் காந்தி மீண்டும் தலைவராக வேண்டும் என்பதுதான். ராகுல் காந்தியைத் தலைவராக நீங்கள் நம்பினால், அவரை சுயமாக முடிவு எடுக்க அனுமதிக்க வேண்டும், காலக்கெடு விதிக்கக் கூடாது. அவரை சுதந்திரமாகச் செயல்பட விட வேண்டும்.

ராகுல் காந்தி எங்கேயும் போகவில்லை, இதற்கு முன் எங்கேயும் செல்லவும் இல்லை. இங்குதான் இருக்கிறார். ராகுல் காந்தி தலைவர் எனும் அடையாளத்தைப் பயன்படுத்தாததால் அவருக்கு அந்தப் பட்டம் இல்லை. அதுபோல் ராகுல் காந்தி நடந்து கொள்வதற்கு அவரை மரியாதை செய்ய வேண்டும். இன்னமும் கட்சிக்குள் ராகுல் காந்திதான் சிறந்த, உயர்ந்த தலைவர். மற்ற தலைவர்கள் இருந்தாலும், அவர்கள் அவர்களுக்குரிய முக்கியத்துவத்தோடு இருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி என்றாலே காந்தி குடும்பத்தார் மட்டும்தானா, இது வாரிசு அரசியலுக்குக் கொண்டு செல்லாதா?
காங்கிரஸ் என்றாலே காந்தி குடும்பம்தான். அதுதான் உண்மை. இதை யாரும் மறைக்க முடியாது. காங்கிரஸ் கட்சியில் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்த வேண்டாம் என யாரும் சொல்லவில்லை. கட்சிக்குள் ஜனநாயக நடைமுறை இருக்கிறது. சிலர் கண்ணை மூடிக்கொண்டு பார்த்தால் உண்மை எவ்வாறு தெரியும். காங்கிரஸ் கட்சிக்குள் ஜனநாயகம் இருக்கிறது என்பது தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

வாரிசு அரசியலில் பயன் அடைந்தவர்கள்தான் இன்று வாரிசு அரசியல் குறித்துப் பேசுகிறார்கள். பாஜக கூட வாரிசு அரசியலால் பயன் பெற்ற கட்சிதான். வாரிசு அரசியலால் பயனடையாத ஒரு கட்சியைக் காண்பியுங்கள். வாரிசு முறை என்பது அரசியல், ஊடகம், தொழில், காவல்துறை, நீதித்துறை, பாலிவுட், நிர்வாகம், பல்கலைக்கழகம் என அனைத்திலும் இருக்கிறது.

இவ்வாறு சல்மான் குர்ஷித் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x