Published : 22 Feb 2020 08:28 AM
Last Updated : 22 Feb 2020 08:28 AM

உருது மொழியை முஸ்லிம்களுக்கு மட்டும் உரியதாக மாற்றும் முயற்சிக்கு எதிர்ப்பு

புதுடெல்லி

ஆர்.ஷபிமுன்னா

பழம்பெரும் மொழிகளில் முக்கியமானதாக இருப்பது உருது மொழி. இது, இந்தியாவின் அரசியலைமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணைப் பிரிவில் இடம்பெற்ற 22 மொழிகளில் ஒன்றாகவும் உள்ளது.

இதன் வளர்ச்சிக்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் என்.சி.பி.யு.எல். தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்நிறுவனத்தை தமது துறைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரான முக்தார் அப்பாஸ் நக்வி, பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியுள்ளார்.

அத்துடன், சிறுபான்மையினருக்கான கல்வித் திட்டங்களையும் தனது துறைக்கு மாற்றவும் வலியுறுத்தி உள்ளார்.

இந்தக் கடிதம் தொடர்பாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். இதற்கு உருது அறிஞர்கள் இடையே கடும் எதிர்ப்புகள் கிளம்பத் துவங்கி உள்ளன.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உருது மொழி அறிவாற்றலுக்காக பத்மபூஷண் பட்டம் பெற்ற கோபிசந்த் நாராங் கூறும்போது, ‘பாரசீகம் மற்றும் இந்தி மொழிகளின் சங்கமமாக உருது அமைந்துள்ளது. இந்துஸ்தானி எனவும் அழைக்கப்பட்ட இதன் வேர், இந்தியாவில் உருவானதால் அதை நம் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என தேசத்தந்தை மகாத்மா காந்தி விரும்பினார். எனவே, இம்மாற்றத்தால் உருது மொழி முஸ்லிம்களுக்கானது மட்டும் என்ற தோற்றம் உருவாகி இந்திய ஒருமைப்பாட்டுக்கு சேதம் ஏற்படும்’ எனத் தெரிவித்தார்.

இந்தியாவின் இந்து மற்றும் முஸ்லிம்களால் உருது மொழி உருவாக்கப்பட்டதாக வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் காலத்தில் உருது மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வளர்க்கப்பட்டது. இதனால், உருது மொழியை முஸ்லிம்கள் அதிகம் பேசி வந்துள்ளனர். உருது மொழியின் முதல் கவிஞராக 1253 முதல் 1325 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த அமிர் குஸ்ரு கருதப்படுகிறார்.

1947-இல் இந்தியாவில் இருந்து பிரிந்த பாகிஸ்தான், தனது தேசிய மொழியாக உருதுவை அறிவித்தது. இதையடுத்து, உருது மொழியை முஸ்லிம்களுக்கானதாக கருதி, இந்தியாவில் அதன் வளர்ச்சி தடுக்கப்படுவதாகவும் ஒரு புகார் நிலவுகிறது.

இந்தச் சூழலில், உருது வளர்ச்சிக்கான நிறுவனமான என்.சி.பி.யு.எல். நிறுவனத்தை மத்திய சிறுபான்மை நலத்துறைக்கு மாற்றுவதில் அரசியல் நோக்கமும் இருப்பதாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வட்டாரம் கூறியதாவது:

இந்த மாறுதல்கள் குறித்து பிரதமர் அலுவலகத்திடம் இருந்து கேட்கப்பட்ட கருத்திற்கு நாம் விளக்கத்துடன் எதிர்ப்பு தெரிவித்து பதில் அளித்துள்ளோம். இதை தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் கேட்கப்பட்டுள்ளது. இதன் மீது பிரதமர் மோடியே நேரடியாக தலையிட்டு விரைவில் முடிவு எடுப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x