Published : 22 Feb 2020 06:35 AM
Last Updated : 22 Feb 2020 06:35 AM
பதவி நீக்க நடவடிக்கையில் இருந்து ஒரு வழியாக தப்பிய சந்தோஷத்தில் இருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வரும் 24-ம் தேதி இந்தியா வருகிறார். அவருக்கு மிகப் பெரிய வரவேற்பு அளிக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கடந்த ஆண்டு குடியரசு தினக் கொண்டாட்டத்தின்போதே ட்ரம்ப் இந்தியா வருவதாக இருந்தது. ஆனால் அப்போது அவருக்கு வேறு பணிகள் இருந்ததால் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டது. ‘அமெரிக்காவில் பணிச்சுமை இருந்ததால்தான் ட்ரம்ப் இந்தியா வர முடியாமல் போனது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஆயுதங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்துக்கும் அவரது வருகை ரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை' என அமெரிக்க அதிகாரிகள் விளக்கம் சொல்லியிருந்தனர். இப்போது, அமெரிக்க தேர்தல் நடக்க இருக்கும் நேரத்தில் அவர் இந்தியா வருகிறார். அமெரிக்காவில் 40 லட்சம் இந்தியர்கள் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சிறுசிறு பிரச்சினைகள் இருந்து வந்தாலும், இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு உறவு மிகவும் நெருக்கமாக இருக்கும் நேரத்தில் ட்ரம்ப் இங்கு வருகிறார். ஆசிய பசிபிக் நாடுகள் தொடர்பாக, குறிப்பாக இந்திய பசிபிக் நாடுகளின் வளர்ச்சியில் அமெரிக்காவின் பங்கு குறித்து எந்த உத்தரவாதமும் இந்த வருகையின்போது தரப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆசியாவில் குறிப்பாக தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் குறித்து அமெரிக்கா ஒரு பக்கம் கவலையோடு கவனித்து வருகிறது. மறுபக்கம், கிழக்கு ஆசிய நாடுகளில், குறிப்பாக ஆப்கானிஸ்தானில் ஆற்றிவரும் தனது கண்காணிப்பு பணிகளைக் குறைத்து வருகிறது. இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தானில் அமைதிப் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் அமெரிக்கா கூறி வருகிறது. வரலாற்று ரீதியாகவும் அரசியல் நிர்பந்தம் காரணமாகவும் இந்தியாவும் ஜப்பானும் ஆப்கன் விஷயத்தில் தலையிட முடியாது என்பதை அமெரிக்கா ஏற்றுக் கொள்வதாக இல்லை.
ஹெலிகாப்டரில் தொடங்கி, கனரக சரக்கு விமானங்கள் வரை கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்காவிடம் இருந்து அதிக அளவில் ராணுவ தளவாடங்களை இந்தியா வாங்கி வருகிறது. தற்போது கூட 600 கோடி டாலர் அளவுக்கு ராணுவ தளவாடங்களை வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரம்ப் இந்தியா வரும்போது அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. அமெரிக்காவுடன் அதிகளவில் வர்த்தகம் செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியா 9-வது இடத்தில் இருக்கிறது. இருதரப்பு வர்த்தகம் 8,800 கோடி டாலர். இதில் அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை 2,100 கோடி டாலர். இரு நாடுகளுக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு மோதல் இருக்கிறது. உதாரணமாக, அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப சாதனங்களுக்கு இறக்குமதி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. தங்கள் நிறுவனங்களின் பால் பொருட்களுக்கும், பாதாம் பருப்புக்கும் இந்திய சந்தையை திறந்துவிட வேண்டும் என அமெரிக்கா கோரி வருகிறது. நீண்ட காலமாகவே அமெரிக்க தயாரிப்பான ஹார்லி டேவிட்ஸன் பைக்குக்கு இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. பதிலுக்கு இந்தியாவும் திராட்சை போன்ற பழங்களை ஏற்றுமதி செய்ய வசதியாக, அமெரிக்க சந்தையை திறந்து விடக் கோரி வருகிறது. இதுபோன்ற சூழலில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்திய விவசாயிகள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள்.
நீண்ட கால நோக்கில் இந்தியாவுக்கு கவலை அளிக்கும் விதமாக வளர்ந்து வரும் சீனாவைத் தடுக்க, அமெரிக்காவிடம் எந்த உத்தியும் இருப்பதாகத் தெரியவில்லை. அதேபோல், பாகிஸ்தான் இந்தியாவுக்கு நிரந்தரத் தலைவலியாக மாறிவிட்டது. சர்வதேச தீவிரவாதத்தின் மையப்புள்ளியாக இருக்கும் பாகிஸ்தானைக் கைவிடவோ அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவோ எந்த திட்டமும் அமெரிக்காவிடம் இல்லை. தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்ததால், நிதி நடவடிக்கை செயல் குழுவின் கண்காணிப்பில் இருக்கும் பாகிஸ்தானைக் காப்பாற்ற முயற்சி செய்யும் அமெரிக்கா மீது, இந்தியா எரிச்சல் அடைந்துள்ளது. இதுபோதாதென்று, அவ்வப்போது காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என வெளியாகும் ட்ரம்ப்பின் அறிவிப்பும் இந்தியாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்தான், சர்வதேச பயங்கரவாதியான மசூத் அஸார் தனது குடும்பத்துடன் காணாமல் போய் விட்டார் என்ற பாகிஸ்தானின் காமெடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு அவ்வப்போது நற்சான்றிதழ் அளிக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் இந்த அறிவிப்புக்குப் பிறகு தங்களின் ஆதரவைத் தொடர இனியாவது யோசிக்க வேண்டும்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்திய வருகை இரு நாட்டு உறவில் மிகப் பெரிய மைல் கல்லாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மிகப் பிரமாண்டமான வரவேற்பு, தாஜ்மகால் விசிட், இருநாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் பேச்சுவார்த்தை என அனைத்தையும் தாண்டி நல்லது நடக்கும் என நம்புவோம். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும், மிகவும் பழமையான ஜனநாயகத்தைக் கொண்ட அமெரிக்காவும் உலக நன்மைக்காக இணைந்து பாடுபட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT