Published : 21 Feb 2020 02:28 PM
Last Updated : 21 Feb 2020 02:28 PM
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையில் உள்ள 15 உறுப்பினர்களில் பெரும்பாலானோர் விஸ்வ இந்து பரிசத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
அதாவது மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில் 11 பேர் ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் உறுப்பினர்கள் என்பதும் தெரியவந்தது.
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக புதிய அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் தொடங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா எனும் அறக்கட்டளையை உருவாக்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது.
இந்த அறக்கட்டளைக்கு ஒரு தலித் உறுப்பினர் உள்பட 15 அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் சொலிசிட்டருமான கே.பராசரன், ஜகத்குரு சங்கராச்சார்யா, ஜோதிஸ்பீதாதீஸ்வர் சுவாமி வாசுதேவானந்த் சரஸ்வதிஜி மகராஜ் (அலகாபாத்), ஜகத்குரு மாதவாச்சார்யா சுவாமி விஸ்வா பிரசன்னதீர்த் ஜி மகராஜ் , உடுப்பி பெஜாவர் மடம், ஹரித்வாரின் யுகபுருஷ் பரமானாந்த் ஜி மகராஜ், புனேவைச் சேர்ந்த சுவாமி கோவிந்த கிரி ஜி மகராஜ் , அயோத்தியைச் சேர்ந்த விமலேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா, ஹோமியோபதி மருத்துவர் அனில் மிஸ்ரா, பாட்னாவைச் சேர்ந்த கமாஸ்ஸவர் சவுபால், நிரமோகி அஹாராவின் மகந்த் தினேந்திர தாஸ், அயோத்தி பைதக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் 9 உறுப்பினர்கள் அதாவது அறக்கட்டளையின் தலைவர் நித்யா கோபால் தாஸ், சுவாமி வாசுதேவானந்த் சரஸ்வதி, சுவாமி பரமானனந்த், சுவாமி விஸ்வ பிரசன்னா, தீர்த்த சுவாமி, கோவிந்த கிரி ஆகியோர் விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் மார்கதர்சக் மண்டல் குழுவிலும், சம்பத் ராய் சர்வதேச பொதுச்செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டியலிடப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் கமலேஸ்வர் சவுபால் விஹெச் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்தவர்.
அயோத்தி நகரில் ஹோமியோபதி மருத்துவரான அனில் மிஸ்ரா ஆர்எஸ்எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவர். அறக்கட்டளையில் உள்ள மூத்த வழக்கறிஞர் கே.பராசரன் ஆர்எஸ்எஸ் அமைப்போடு நீண்டகாலத் தொடர்புடையவர். விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் சட்ட ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.
இதில் நிர்மோகி அகாதாவின் மகந்த் தினேந்திரா, விமலேந்திரா மோகன் பிரதாப் மிஸ்ரா ஆகிய இருவர் மட்டுமே விஹெச்பி அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்போடு எந்தவிதமான தொடர்பும் இல்லாதவர்கள்.
புதிதாக அமைக்கப்பட்ட அறக்கட்டளை அயோத்தியில் பக்தர்களைச் சந்தித்து ராமர் கோயில் கட்டுமானம் தொடர்பாகப் பேசத் தொடங்கியுள்ளது. நாளை (22-ம் தேதி) அயோத்தியில் உள்ள ஹனுமன் மண்டல் பெயரில் ஆலோசனைக் கூட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
அதன்பின் 2-வது ஆலோசனைக் கூட்டம் மார்ச் 3 அல்லது 4-ம் தேதி அயோத்தியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் திட்டம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
ராமர் கோயில் கட்டும் குழுவின் தலைவராக பிரதமர் மோடியின் முன்னாள் உதவியாளர் நிர்பேந்திர மிஸ்ரா பெயர் முன்மொழியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ராமர் கோயில் அறக்கட்டளை அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று பிரதமர் மோடியைச் சந்தித்து பூமி பூஜைக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT