Published : 20 Feb 2020 08:29 PM
Last Updated : 20 Feb 2020 08:29 PM
அருணாசலப்பிரதேச மாநிலம் உதயமான நாளான இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு சென்றதற்குச் சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
அருணாச்சலப்பிரதேசம் என்பது எப்போதும் தெற்கு திபெத், இந்திய அரசியல் தலைவர் அங்கு வருவது என்பது சீனாவின் எல்லைக்குரிய இறையாண்மை, அரசியல் பரஸ்பர நம்பிக்கையை மீறும் செயலாகும் என்று சீனா கண்டனம் தெரிவித்துள்ளது
அருணாச்சல பிரதேச மாநிலம் உதயமான 34-வது ஆண்டு தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அங்கு பல்வேறு தொழில்ரீதியான திட்டங்களையும், சாலைகளைத் திட்டங்களையும் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
அப்போது அங்கு நடந்த விழாவில் அமித் ஷா பேசுகையில் " அருணாச்சல பிரதேசம் மற்றும் மிஸோரம் மாநிலங்கள் பிறந்த தினமான இன்று அந்த மாநில மக்களுக்கு ஒரு உறுதி மொழியை அளிக்கிறோம். 371-வது பிரிவை எந்த காலத்திலும் நீக்க மாட்டோம். யாரும் அதுபோன்ற முடிவெடுக்க அனுமதிக்க மாட்டோம்.
வடகிழக்கு மாநிலங்களின் நலனில் பிரதமர் மோடி முழு அக்கறை கொண்டுள்ளார். 2014-ம் ஆண்டுக்கு முன்பு வடகிழக்கு மாநிலங்கள் புவியியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் மட்டுமே இந்தியாவுடன் இணைந்து இருந்தது. பிரதமர் பதவியை மோடி ஏற்ற பிறகே வடகிழக்கு மாநிலங்கள் இந்திய ஆன்மாவுடன் இணைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
அருணாச்சலப்பிரதேசத்துக்கு உள்துறை அமைச்சர் அமத் ஷா சென்றதற்குச் சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கெங் சுவாங் கூறுகையில், " இந்தியா-சீனா எல்லையில் கிழக்குப்பகுதி அல்லதுதிபெத்தின் தெற்குப்பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது, இது தெளிவான ஒன்று.
அருணாச்சலப்பிரதேசம் என்று அழைக்கப்படுவதை ஒருபோதும் சீனா அங்கீகரிக்கவில்லை. இந்திய அரசியல் தலைவர்கள் சீனாவின் எல்லைக்கும், ஆளுகைக்கும் உட்பட்ட திபெத் பகுதிக்குச்செல்வது சீனாவின் இறையாண்மைக்கும், எல்லைப்பகுதியை மதிப்புக்குறைவாக நினைப்பதற்கும் சமம். இவ்வாறு நடப்பது இரு நாடுகளுக்கு இடையிலான அரசில் பரஸ்பர நம்பிக்கையையும், இருதரப்பு ஒப்பந்தத்தையும் மீறுவது போலாகும்
இந்திய தரப்பில் இருந்து இனிமேல் அங்குச் செல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், எல்லைப்புற பிரச்சினைகளை இன்னும் சிக்கலாக்கும். எல்லைப்பகுதியில் அமைதியும், நிலைத்தன்மையும் நிலவ உறுதியான நடவடிக்கை எடுங்கள்" எனத் தெரிவித்தார்
இந்தியா-சீனா எல்லையில் 3,488 கி.மீ எல்லைக் கட்டுப்பாட்டுப்பகுதி சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வருகிறது. அருணாச்சலப்பிரதேசத்தை திபெத்தின் தெற்குப் பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க இதுவரை 22 சுற்றுப்பேச்சு நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் சீனா கண்டனம் தெரிவித்ததற்கு இந்தியாவும் கண்டித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் நிருபர்களிடம் கூறுகையில், " அருணாச்சலப்பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறது. சீனாவின் கருத்துக்குக் கண்டனம் தெரிவிக்கிறோம்" எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT