Published : 19 Feb 2020 03:24 PM
Last Updated : 19 Feb 2020 03:24 PM
சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவிடம் ஏன் உண்மை அறியும் சோதனையோ, அல்லது உளவியல் சோதனையோ நடத்தப்படவில்லை என்று சிபிஐ-யிடம் சிறப்பு நீதிமன்றம் கறார் கேள்வி எழுப்பியது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சனா சதீஷ்பாபு என்பவர் சிபிஐ சிறப்பு இயக்குநர் அஸ்தானா, குமார் மற்றும் பிரசாத் சகோதரர்கள் மீது அளித்த புகாரில் இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மற்றும் பிறருக்கு எதிரான வழக்கு ஒன்றிலிருந்து விடுபட அஸ்தானா உள்ளிட்டோருக்கு ரூ.3 கோடி லஞ்சம் அளித்ததாக கூறினார்.
ஆனால் சனா பாபுவை போலீஸார் ஜூலை 2019-ல் நிதி மோசடி வழக்கில் கைது செய்தனர்.
இந்நிலையில் வழக்கு குறித்த டயரியை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் முந்தைய விசாரணை அதிகாரி அஜய் குமார் பாஸி என்ன ஆனார் என்றும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.
இதற்குப் பதில் அளித்த சிபிஐ, அஜய் குமார் பாஸி போர்ட் பிளேருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக பதில் அளித்தது.
இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு சிபிஐ தலைவர் அலோக் குமார் வர்மாவின் அதிகாரம் முடக்கப்பட்டது. அலோக் குமார் வர்மாவும், அஸ்தானாவும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வந்தது நினைவிருக்கலாம்.
அஸ்தானா குற்றம்சாட்டப்பட்டவரை சந்தித்தாரா, அஸ்தானாவின் மொபைல் போன்கள், லாப்டாப்கள் சோதனை செய்யப்பட்டதா? புகார்தாரரின் குற்றச்சாட்டை மறுக்கும் விதமாக ஏதாவது ஆதாரங்கள் இருக்கிறதா, அஸ்தானாவிடம் ஏன் உண்மை அறியும் சோதனை நடத்தப்படவில்லை? என்று சிறப்பு நீதிமன்றம் சிபிஐ அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியது.
இதற்குப் பதில் அளித்த சிபிஐ, குற்றம்சாட்டப்பட்ட சிலர் மற்றும் சில சாட்சிகளிடம் உண்மை அறியும் சோதனை மேற்கொண்ட போது சரியாக அமையவில்லை, ஏமாற்றமே எஞ்சியதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து பிப்ரவரி 28ம் தேதிக்கு வழக்குத் தள்ளி வைக்கப்பட்டதோடு அன்றைய தினம் முந்தைய விசாரணை அதிகாரி பாஸியும் நீதிமன்றத்துக்கு வந்து வழக்கு டயரியை ஆராய உதவ வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT