Published : 18 Feb 2020 01:42 PM
Last Updated : 18 Feb 2020 01:42 PM
பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் ஒரே நேரத்தில் நாதூராம் கோட்சேவாகவும், மகாத்மா காந்தியாகவும் எவ்வாறு இருக்க முடியும்? பிஹாரின் வளர்ச்சி குறித்து என்னுடன் விவாதிக்க நிதிஷ் குமாரும், அமைச்சரவையும் தயாராக இருக்கிறார்களா? என்று அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கடந்த மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீரின் 370-வது பிரிவு நீக்கம் ஆகியவற்றுக்கு நிதிஷ் குமார் ஆதரவு தெரிவித்ததை பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்து வந்தார். இதனால் ஏற்பட்ட உரசலால், பிரசாந்த் கிஷோரை கட்சியில் இருந்து நிதிஷ் குமார் நீக்கினார்.
இந்த சூழலில் பிரசாந்த் கிஷோர் பாட்னாவில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''எனக்கும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் நல்ல உறவு இருக்கிறது. நான் கட்சியில் இருந்தபோது என்னை அவரின் மகனைப் போல்தான் மரியாதையுடன் நடத்தினார்.
ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இணைந்த விவகாரத்தில் எனக்கும், நிதிஷ்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் விஷயத்திலும் நிதிஷ் குமார் தெளிவான நிலைப்பாடு எடுக்கவில்லை. அதிலும் எனக்கு முரண்பாடு இருந்து வருகிறது.
நாதூராம் கோட்சேவை நிதிஷ் குமார் ஆதரிக்கிறாரா அல்லது மகாத்மா காந்தியின் பாதையில் செல்கிறாரா என்பதை நிதிஷ் குமார் தெளிவாகக் கூறுவது அவசியம். நான் நிதிஷ் குமாரிடம் கேட்பது என்னவென்றால், ஒரேநேரத்தில் எப்படி உங்களால் கோட்சேவாகவும், காந்தியாவும் நடக்க முடியும் இருக்க முடியும் என்பதுதான்.
இப்போதுள்ள சூழலில் பிஹார் மாநிலத்துக்கு மற்றவர்களை நம்பி இருக்காத துணிச்சலான முடிவுகளை எடுக்கும் தலைவர் தேவை. நான் நிதிஷ்குமார் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அதனால்தான் அவரின் முடிவை நான் கேள்வி கேட்கமாட்டேன்.
நான் காந்தி, ஜெயப்பிரகாஷ், ராம் மனோகர் லோகியா ஆகியோரின் சித்தாந்தங்களை விட்டு விலக முடியாது என்று நிதிஷ் குமார் எப்போதும் கூறுகிறார். அதே நேரத்தில் எவ்வாறு நிதிஷ் குமார் போன்றவர்கள், கோட்சேவின் சித்தாந்தங்களுக்குத் துணை செல்பவர்களுடன் இருக்க முடியும். இருதரப்பிலும் ஒன்றாக இருக்க முடியாது. நீங்கள் பாஜகவுடன் இருக்க விரும்பினால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், நீங்கள் இரு தரப்பிலும் இருக்க முடியாது.
எனக்கும் நிதிஷ் குமாருக்கும் இடையே ஏராளமான விவாதங்கள் இருக்கின்றன. அவருடைய கருத்து அவருக்கு, என்னுடைய கருத்து என்னுடையது. எனக்கும், அவருக்கும் இடையே வேறுபாடுகள் அதிகமாக இருக்கின்றன, அதனால்தான் சொல்கிறேன். காந்தியின் சித்தாந்தங்களும், கோட்சேவின் சித்தாந்தங்களும் ஒரே இடத்தில் நிற்க முடியாது. ஒருகட்சியின் தலைவராக நீங்கள்தான் எந்தக் கட்சியின் பக்கம் இருக்கிறீர்கள் எனக் கூற வேண்டும்.
நாட்டில் முதல் 10 மாநிலங்களுக்குள் பிஹாரைக் கொண்டுவருவேன் என முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார். நான் பிஹார் மாநிலத்துக்காக அர்ப்பணிப்புடன் வேலை பார்க்க விரும்புகிறேன். அவரும் அரசியல்ரீதியாக மாநிலத்தில் இணைந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக பிஹார் மாநிலத்தில் வளர்ச்சி இருக்கிறது என்றாலும், அது இருக்க வேண்டிய வேகத்தில் இல்லை.
கடந்த 2005-ம் ஆண்டில் பிஹார் மாநிலம் ஏழ்மையாக இருந்தது. இப்போது அப்படித்தான் இருக்கிறது. ஆனால் யாரும் நிதிஷ் குமார் அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் நிலையில் இல்லை.
பிஹாரின் வளர்ச்சி குறித்து முதல்வர் நிதிஷ் குமாரும், அவரின் அமைச்சரவையும், என்னுடன் விவாதம் செய்யத் தயாராக இருக்கிறார்களா? என்னுடன் மாநிலத்தின் புள்ளிவிவரங்களை எடுத்துவைத்து விவாதிக்கத் தயாராக இருக்கிறார்களா?''
இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT