Published : 18 Feb 2020 12:38 PM
Last Updated : 18 Feb 2020 12:38 PM
2014-ம் ஆண்டு தேர்தலின்போது மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தபோது 2 கிரிமினல் வழக்குகளை மறைத்தது தொடர்பாக விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பை ஒத்திவைத்தது.
நாக்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சதீஸ் உகே மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில் தேர்தலில் பிரமாணப் பத்திரத்தில் பட்னாவிஸ் தன் மீது இருக்கும் இரு கிரிமினல் வழக்குகள் குறித்துக் குறிப்பிடவில்லை
கடந்த 1996, 1998-ம் ஆண்டு பட்னாவிஸுக்கு எதிராக மோசடி மற்றும் ஏமாற்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், இந்த வழக்கில் அவர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், இரு வழக்குகள் குறித்தும் பட்னாவிஸ் தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடவில்லை. இந்த வழக்கில் பட்னாவிஸுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்த வழக்கை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் தேவேந்திர பட்னாவிஸ் வழக்குத் தொடர்ந்தார். பட்னாவிஸ் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மாஜிஸ்திரேட் உத்தரவை உறுதி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் பட்னாவிஸ் மேல்முறையீடு செய்திருந்தார். பட்னாவிஸ் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பட்னாவிஸ் மீதான விசாரணையைத் தொடரத் தடையில்லை என 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி எஸ்.டி.மேத்தா கடந்த 4-ம்தேதி பட்னாவிஸுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதில், "மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குற்ற விவரங்களை மறைத்தது தண்டனைக்குரிய குற்றம். அதற்கு விளக்கம் தாருங்கள்" என்று நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேவேந்திர பட்னாவிஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகினார், அவர் வாதிடுகையில், " 2019-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும், அந்த வழக்கில் அளித்த தீர்ப்பு பல்வேறு வேட்பாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
பட்னாவிஸ் மீதான வழக்கில் அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் பதவி செய்யப்படவில்லை. அவர் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்படவும் இல்லை. ஆதலால், இந்த வழக்கில் ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதி அருண் மிஸ்ரா, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125 ஏ பிரிவின் கீழ் இந்த வழக்கு வருமா அல்லது இல்லையா என்பதுதான். அதுமட்டுமல்லாமல் மனுதாரர் தனது பிரமாணப் பத்திரத் தாக்கலின்போது தகவல்களை மறைத்தாரா என்பது குறித்துதான் என்று தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT